புதுச்சேரி துறைமுகத்தில் 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இன்றும் அரசு விடுமுறை
நிவர் புயலையொட்டி புதுச்சேரி, கடலூர் துறைமுகங்களில் 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இன்றும் அரசு சார்பில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
வங்கக் கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் அதி தீவிரமாகி உள்ளது. இது புதுச்சேரி அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதையொட்டி புதுச்சேரி பழைய துறைமுகத்தில் நேற்று (புதன்கிழமை) 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்த புயல் துறைமுகத்தை அல்லது அதன் அருகே கடந்து செல்லும். அப்போது கடுமையான வானிலைக்கு உட்படும் என்பதை குறிப்பதாகும். முன்னதாக இங்கு 7-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருந்தது. இதன் காரணமாக புதுச்சேரி கடல் பகுதி வழக்கத்துக்கு மாறாக கடும் சீற்றத்துடன் காணப்பட்டது.
பழைய துறைமுக பகுதியில் உள்ள பாலத்தின் உயரத்துக்கு அலைகள் சீறிப்பாய்ந்தன. பலத்த இரைச்சலுடன் காற்றும் வீசியது. இதையொட்டி கடலுக்கு பொதுமக்கள் யாரும் வந்து விடக் கூடாது என்பதற்காக கடற்கரை சாலை தடுப்புகள் அமைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது. போலீசாரும் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
காரைக்கால் தனியார் துறைமுகத்தில் 8-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என மீனவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். புயல் காரணமாக கடல் பகுதியில் கடும் சீற்றம் காணப்படுகிறது. அலைகள் சீறிப்பாய்வதையொட்டி பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
‘நிவர்’ புயல் அச்சுறுத்தல் காரணமாக புதுவை அரசு சார்பில் நேற்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் புதுச்சேரி அருகே இன்று (வியாழக்கிழமை) அதிகாலைக்குள் புயல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி கவர்னர் கிரண்பெடி உத்தரவின் பேரில் புதுவை மற்றும் காரைக்காலில் அரசு ஊழியர்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஈடுகட்டும் வகையில் வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படும் என புதுவை அரசின் சார்பு செயலர் எம்.வி. கிரண் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியிலும், காரைக்காலிலும் ஏற்றப்பட்டுள்ள புயல் எச்சரிக்கை கூண்டு.
புதுச்சேரியை கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தானே புயல் தாக்கியது. அப்போது (அதாவது டிசம்பர் 29-ந்தேதி) புதுச்சேரி துறைமுகத்தில் உச்சபட்சமாக 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. அதை தொடர்ந்து வீசிய தானே புயல் மாநிலத்தையே புரட்டிப் போட்டு விட்டுச் சென்றது.
அதன் பிறகு தற்போது நிவர் புயலுக்கு 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதாவது, 9 ஆண்டுகளுக்கு பிறகு இத்தகைய நிகழ்வு ஏற்பட்டுள்ளது. இதனால் தானேவின் கோர தாண்டவம் போன்று நிவரின் தாக்கமும் இருக்குமோ என்று மக்கள் அச்சத்துக்கு உள்ளானதுடன், இது ஒரு பெரும் விவாதப் பொருளாகவே மாறியது.