புயல் கரையை கடந்ததாக அரசு அறிவிக்கும் வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் - வளர்ச்சிதுறை ஆணையர் அன்பரசு வேண்டுகோள்
புயல் கரையை கடந்ததாக அரசு அறிவிக்கும் வரை பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வளர்ச்சி துறை ஆணையர் அன்பரசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி அருகே நிவர் புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதால் அதனால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் அரசு தரப்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதையொட்டி அனைத்து துறை அதிகாரிகள் கொண்ட 16 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவின் ஆலோசனை கூட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரிடர் மேலாண்மை துறை அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு வளர்ச்சி ஆணையர் அன்பரசு தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) பூர்வா கார்க் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் புயலின் தற்போதைய நிலை, அதனை எதிர்கொள்ள அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் வளர்ச்சி துறை ஆணையர் அன்பரசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
நிவர் புயலின் நிலைமை நாளுக்கு நாள் மாறி வருகிறது. காற்றழுத்த தாழ்வு நிலையாக இருந்து தற்போது அதிதீவிர புயலாக மாறியுள்ளது. ஆரம்பத்தில் இருந்த புயலின் வேகம் அடுத்தடுத்து குறைந்து மீண்டும் வேகம் அதிகரித்தது. இது கரையை கடக்கும் போது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒடிசாவை புரட்டிப் போட்டது போல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடலில் புயல் அதிக நாட்கள் மையம் கொண்டிருக்கும் போது காற்றின் ஈரத்தை அதிகம் உறிஞ்சும். இது கரையை கடக்கும் போது மழை அதிகமாக இருக்கும்.
நள்ளிரவு முதல் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 6 மணிக்குள் புதுவைக்கும், மரக்காணத்திற்கும் இடையே 120 கி.மீ. முதல் 145 கி.மீ. வேகத்தில் நிவர் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். மின்கம்பங்கள் சாய்ந்து விழ வாய்ப்பு உள்ளது.
புயலின் மைய பகுதி கடக்கும்போது அமைதியாக காணப்படும். இதை வைத்து புயல் திசை திரும்பி விட்டதாக கருதி விடக்கூடாது. ஏனென்றால் அதன்பிறகு தான் மீண்டும் அதிக காற்று வீசும். கடல் சீற்றம் அதிகமாக இருக்கும். அலைகள் 2 மீட்டர் உயரத்துக்கு சீறிப்பாயும். எனவே தாழ்வான பகுதிகளில் கடல்நீர் உட்புகவும் வாய்ப்புள்ளது.
எனவே புயல் கடந்து விட்டது என்று அரசின் அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். புயல் தாக்கத்தை கணித்து அரசு துறைகள் அனைத்தும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடலோரத்தில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பு முகாமிற்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல் வீடுகளில் வசிப்பவர்களாக இருந்தாலும் அவர்கள் பாதுகாப்பு முகாமிற்கு வர வேண்டும். இதுகுறித்து ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எங்காவது மழைநீர் தேங்கினால் 3 மணிநேரத்தில் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மின்சாரம் தடைபட்டால், குடிநீர் தடைபட்டால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் செய்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுவையை சேர்ந்த மீனவர்கள் அனைவரும் கரை திரும்பிவிட்டனர். காரைக்காலில் 10 படகுகளில் சென்ற மீனவர்கள் இன்னும் கரைக்கு திரும்பவில்லை. அவர்களை தொடர்பு கொண்டுள்ளோம். அருகில் உள்ள பகுதிகளில் பாதுகாப்பாக தஞ்சமடையும்படி வலியுறுத்தியுள்ளோம். புதுவையில் அத்தியாவசியப் பொருட்களான பால், மருந்துகள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அரசு துறைகளை ஒருங்கிணைந்து அதிகாரிகள் 24 மணிநேரமும் பணிபுரிந்து வருகின்றனர். அரசுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.