நிவர் புயலால் தொடர்ந்து பலத்த மழை பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - 144 தடையால் சாலைகள் வெறிச்சோடின

நிவர் புயலால் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் புதுவையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 144 தடை உத்தரவால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

Update: 2020-11-25 17:29 GMT
புதுச்சேரி, 

புதுச்சேரி- மரக்காணம் இடையே நிவர் புயல் கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்து இருப்பதையொட்டி பாதிப்பை சமாளிக்க அரசு துறைகள் அனைத்தும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. கடந்த 3 நாட்களாக மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. மீனவ கிராமங்களில் படகுகள் அனைத்தும் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் தங்குவதற்கு வசதியாக சமுதாயக் கூடங்கள், பள்ளிக் கூடங்கள், திருமண மண்டபங்கள் என புதுவையில் 196 மையங்களும், காரைக்காலில் 50 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கடலோர பகுதியில் வசிப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பு மையங்களுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி நேற்று மாலை வரை 500-க்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வருவாய்துறை சார்பில் உணவு, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தேவைப்படுவோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. சானிடைசர் மற்றும் முககவசமும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

புதுவையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் நேற்று காலை முதல் பஸ்கள், ஆட்டோக்கள், டெம்போக்கள் எதுவும் ஓடவில்லை. இதனால் புதிய, பழைய பஸ்நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. கடைகள், ஓட்டல்கள், மதுக் கடைகள், தியேட்டர்கள், தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. பால் பூத், மருந்தகங்கள், மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க் ஆகியவை மட்டும் செயல்பட்டன.

ஒரு சில இடங்களில் திறந்து வைத்து இருந்த கடைகளை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனே மூடும்படி உத்தரவிட்டனர். மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. கடற்கரை சாலையும் தடுப்புகள் அமைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

புதுவையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சாரல் மழை தொடங்கியது. நேற்று அதிகாலை முதல் காற்றுடன் கூடிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. சாலைகளிலும் வெள்ளம் போல் ஓடியது.

காற்று மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் நேருவீதி, லெனின்வீதி, ஆம்பூர் சாலை, லாஸ்பேட்டை, கடலூர் சாலை உள்பட பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதுபற்றி அறிந்ததும் பொதுப்பணி, உள்ளாட்சி, தீயணைப்பு, வனம் உள்ளிட்ட அரசு துறை ஊழியர்கள் அங்கு விரைந்து சென்று நவீன எந்திரங்கள் மூலம் அந்த மரங்களை துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினர். சில இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாய்ந்து விழுவது போல் இருந்த மரங்களும் அப்புறப்படுத்தப்பட்டன. இதையொட்டி அந்த பகுதியில் சிறிது நேரம் மின்சாரம் தடை செய்யப்பட்டது. புயல் காரணமாக நேற்று பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

புயல் பாதிப்பு தொடர்பாக மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கு வசதியாக புதுவையில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. 1070, 1077 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்ள அரசு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.

நேற்று காலை முதல் மாலை வரை 100-க்கும் மேற்பட்ட மழை சேதம் தொடர்பான புகார்கள் பதிவாகின. இது குறித்து உடனுக்குடன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டன. ஒட்டுமொத்தமாக அரசின் அனைத்து துறைகளும் புயலை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதுவைக்கு வந்துள்ள பேரிடர் மீட்புக் குழுவினரும் தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். புதுவையில் நேற்று காலை முதல் மாலை 5.30 மணி வரை 6.2 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

மேலும் செய்திகள்