மோட்டார்சைக்கிள்கள் மோதல்: விபத்தில் பலியான வாலிபர் மீது வழக்கு; உறவினர்கள் சாலை மறியல்

மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் பலியான வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து, அவரது உறவினர்கள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2020-11-25 13:51 GMT
ஆண்டிப்பட்டி, 

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள அட்டணம்பட்டியை சேர்ந்தவர் கருத்தப்பாண்டி (வயது 24). நேற்று முன்தினம் இரவு இவர், அட்டணம்பட்டியில் இருந்து வத்தலக்குண்டுவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பெரியகுளம்- வத்தலக்குண்டு மெயின்ரோடு மீனாட்சிபுரம் விலக்கு அருகே மோட்டார் சைக்கிள் வந்தது.

அப்போது அவருடைய மோட்டார்சைக்கிள், முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் கருத்தப்பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வத்தலக்குண்டுவை சேர்ந்த விஜய் (24) அவரது அக்கா துர்கா (30), அக்கா மகன்கள் தர்ஷன்(4), தருண் (2) ஆகியோர் தவறி விழுந்து படுகாயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

போலீசார் வழக்குப்பதிவு

இதனிடையே ரெட்டியார்சத்திரத்தில் இருந்து பெரியகுளம் நோக்கி சென்ற கார், கருத்தப்பாண்டி ஓட்டிச்சென்று விபத்துக்குள்ளான மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார்சைக்கிள் பலத்த சேதமடைந்தது.

இதுதொடர்பாக கருத்தப்பாண்டி மற்றும் கார் ஓட்டி வந்த ரெட்டியார்சத்திரத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் (31) ஆகியோர் மீது தேவதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கருத்தப்பாண்டியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாலை மறியல்

இந்தநிலையில் கருத்தப்பாண்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகம் முன் தேனி-மதுரை சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த க.விலக்கு போலீசார் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு, கருத்தப்பாண்டியின் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியல் காரணமாக, அரை மணி நேரத்திற்கும் மேலாக அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்