ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று பட்டணம்காத்தான் முதல்நிலை ஊராட்சிக்கு உட்பட்ட கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட கூட்டமைப்பு செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
இதில் பட்டணம்காத்தான் ஊராட்சி மன்ற தலைவரும், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் கூட்டமைப்பு தலைவருமான சித்ரா மருது, பொருளாளர் முகமது இக்பால், ஒருங்கிணைப்பாளர் கோகிலா ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு வழங்கிய 15-வது நிதிக்குழு மானியத்தை ஊராட்சியின் அடிப்படை வசதிகளை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும், ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவியேற்று 1 வருடம் முடியும் நிலையில் கிராமத்தின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாமல் நிதி பற்றாக்குறை தொடர் பிரச்சினையாக உள்ளது. ஆகவே ஊராட்சிக்கு வழங்கப்படும் நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.
ஊராட்சியில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வரும் அனைத்து பணிகளையும் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி ஊராட்சி மன்ற தலைவர் மூலமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அண்டை மாநிலங்களில் வழங்கப்படுவதைப்போல் மாதம் ரூ.30 ஆயிரம் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும், ஊராட்சியின் வளர்ச்சி பணிகளில் ஒன்றிய குழு தலைவர்களின் குறுக்கீடுகளை தடுக்க வேண்டும், பஞ்சாயத்துராஜ் சட்டத்தின் படி ஊராட்சி மன்ற தலைவர்களின் முழுமையான அதிகாரத்தை செயல்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. முடிவில் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.