கீழ்பென்னாத்தூரில், தொப்புள் கொடியுடன் புதரில் பிணமாக வீசப்பட்ட ஆண் குழந்தை - நாய் கவ்விக்கொண்டு சென்ற கொடூரம்

கீழ்பென்னாத்தூரில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தையை தொப்புள்கொடி கூட அறுக்கப்படாமல் புதரில் பிணமாக யாரோ வீசிச்சென்றுள்ளனர். அதனை நாய் ஒன்று கவ்விச்சென்ற சம்பவம் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.

Update: 2020-11-25 02:45 GMT
கீழ்பென்னாத்தூர்,

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் குளக்கரை மேடு அருகில் செயல்படாத உழவர் சந்தை உள்ளது. இதன் எதிர்ப்புறம் உள்ள குடியிருப்புகளின் பின்புறம் செடி கொடிகளுடன் மண்டிக்கிடந்த புதரில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் பிறந்த ஆண் குழந்தையை தொப்புள் கொடியுடன் யாரோ வீசிவிட்டுச் சென்றுள்ளனர். அந்த குழந்தை பிணமாக கிடந்ததாக கூறப்படுகிறது.

நேற்று காலை அந்த குழந்தையின் உடலை நாய் ஒன்று புதரிலிருந்து கவ்விச்சென்று குழந்தையின் காலை கொடூரமாக கடித்து துண்டித்ததை பார்த்தவர்களின் நெஞ்சு பதைபதைத்தது. அவர்கள் நாயை விரட்டிவிட்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

குழந்தையை வீசிச் சென்றவர்கள் யார்? என்பது தெரியவில்லை. கள்ளக்காதலால் குழந்தை பிறந்ததால் அதனை பெற்ற பெண் வீசினாரா? அல்லது வளர்க்க முடியாமல் வீசினாரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் கீழ்பென்னாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை தேடி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தை திருவண்ணாமலை உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி, துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) சந்தோஷ் பாண்டியன் ஆகியோரும் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்