‘நிவர்’ புயல் தீவிரம்: நாகை துறைமுகத்தில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

‘நிவர்’ புயல் தீவிரம் அடைந்துள்ளதையொட்டி நாகை துறைமுகத்தில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

Update: 2020-11-24 22:15 GMT
நாகப்பட்டினம்,

வங்க கடலில் தற்போது உருவாகியுள்ள ‘நிவர்’ புயல் தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 2 நாட்களாகவே நாகையில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி இந்த தீவிர புயல் அதிதீவிர புயலாக மாறி உள்ளது என்றும், இன்று(புதன்கிழமை) புதுச்சேரிக்கும், மரக்காணத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்றும், புயல் கரையை கடக்கும் நேரத்தில் 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்திலும், சமயங்களில் 140 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

‘நிவர்’ புயலையொட்டி நாகை துறைமுக அலுவலகத்தில் நேற்று 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது இந்த பகுதியில் காற்று 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதே 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுக்கான விளக்கம் ஆகும்.

இதனையொட்டி கடலோரங்களில் வசிப்பவர்கள் மற்றும் கடலோரத்தை ஒட்டியுள்ள கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் உயிரையும், உடமைகளையும் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தங்களது கூரை வீடுகளில் தார்ப்பாய் கொண்டு கட்டி வைப்பது, ஓட்டு வீடுகளில் ஓடுகளை பிரித்து அடுக்கி வைப்பது, மரங்களில் உள்ள மட்டைகள், கிளைகளை வெட்டி அப்புறப்படுத்துவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளில் நேற்று ஈடுபட்டனர். தாழ்வான பகுதிகளில் உள்ள குடிசைகளில் வசித்து வந்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் சென்று தங்கி உள்ளனர்.

மேலும் செய்திகள்