புதுச்சேரியில் 144 தடை உத்தரவு மிரட்டுகிறது ‘நிவர்’ புயல் இன்று அரசு விடுமுறை
மிரட்டும் ‘நிவர்’ புயலை எதிர்கொள்ள கடலோர மாவட்டங்களில் உச்சகட்ட முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், இன்று அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
வங்க கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறிவருகிறது.
இந்த புயலை எதிர்கொள்ள புதுவை அரசு பல்வேறு முன்எச்சரிக்கைகளை எடுத்து இருக்கிறது. கடலோர பகுதி முழுவதும் உஷார் படுத்தப்பட்டு இருக்கிறது.
சீறிப்பாய்ந்த கடல் அலைகள்
தற்போதைய நிலவரப்படி இந்த புயல் இன்று(புதன்கிழமை) மதியம் புதுச்சேரிக்கும், மரக்காணத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 145 கி.மீ. வேகத்தில் புயல் கரையை கடக்கும் என்பதால் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
நிவர் புயலையொட்டி கடந்த 2 நாட்களாக புதுச்சேரி கடல் வழக்கத்துக்கு மாறாக அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. பல அடி உயரத்துக்கு அலைகள் சீறிப்பாய்ந்தன. இதனால் கடலுக்கு செல்லும் சாலை அனைத்தும் தடுப்புகள் வைத்து பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதை மீறி செல்ல முயன்ற சுற்றுலா பயணிகளை போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து வெளியே அனுப்பினர்.
பேரிடர் மீட்புக்குழு
வம்பக்கீரப்பாளையம், சோலைநகர், வைத்திக்குப்பம், வீராம்பட்டினம், நல்லவாடு, கனகசெட்டிக்குளம், காலாப்பட்டு உள்ளிட்ட கடலோர பகுதியில் வசித்து வந்த பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி போலீசார் அறிவுறுத்தினர். கடற்கரையோரத்தில் இருந்த படகுகளை மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர். 2-வது நாளாக நேற்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இன்றும் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை முதல் பகல் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தபடி இருந்தது. புயலால் பாதிப்பு ஏற்பட்டால் அதை சமாளிக்கும் வகையில் அரசு துறைகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பேரிடர் மீட்பு குழுவினர் 90 பேர் தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடன் ஏற்கனவே புதுச்சேரிக்கு வந்து தங்கி உள்ளனர். ஐ.ஆர்.பி.என். தீயணைப்பு துறை, காவல்துறையில் பேரிடர் கால பயிற்சி பெற்றவர் களும் அவர்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபடுவார்கள்.
144 தடை உத்தரவு
நேற்று காலை துறைமுகத்தில் 7-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது துறைமுகத்தை நெருங்குகின்ற அல்லது கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படும் புயலால் ஏற்படும் கடுமையான வானிலைக்கு துறைமுகம் உட்படும் என்பதை குறிப்பதற்கான அடையாளம் ஆகும். இந்த நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று காலை கடற்கரைக்கு சென்று பார்வையிட்டார்.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (புதன்கிழமை) அரசு சார்பில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு அதிகாரிகள் விடுமுறை எடுக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி புதுச்சேரி மாநிலம் முழுவதும் நேற்று (செவ்வாய்கிழமை) இரவு 9 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளை (வியாழக்கிழமை) காலை 6 மணி வரை அதாவது 33 மணி நேரம் இது நடைமுறையில் இருக்கும்.
பஸ்கள் ஓடாது
அதன்படி தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள், மதுக்கடைகள், மால், தியேட்டர்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்படும். பொதுமக்கள் வெளியில் நடமாடவும் தடை விதிக்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடாது. 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடத்தப்படும் வகுப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளான பால், மருந்தகங்கள், பெட்ரோல் பங்க்குகள் உள்ளிட்டவை வழக்கம் போல் செயல்படலாம் என்று புதுச்சேரி மாவட்ட நீதிபதி பூர்வா கார்க் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் ஷாஜகான் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
பாதுகாப்பு மையங்கள்
நிவர் புயலால் பாதிப்பு ஏற்பட்டால் அதை சமாளிக்கும் வகையில் ஒவ்வொரு பகுதியிலும் அனைத்து துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது என்பதால் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்காமல் உடனுக்குடன் அப்புறப்படுத்த மோட்டார் என்ஜின்களும், அந்த பகுதியில் வசிப்பவர்கள் தங்குவதற்கு வசதியாக சமுதாயக் கூடங்கள், திருமண மண்டபங்கள், பள்ளிகளும் தயார் நிலையில் உள்ளன. அவர்களுக்கு உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக புதுச்சேரியில் 196, காரைக்காலில் 50 பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
110 கி.மீ. வேகத்தில் புயல் கரையை கடக்கும் என்பதால் மறு உத்தரவு வரும் வரை பொதுமக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். புயலை வேடிக்கை பார்க்கும் ஆர்வத்தில் கடற்கரைக்கும் வரக்கூடாது. விளம்பர பதாகைகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
அச்சம் தேவையில்லை
புயலை எதிர்கொள்ள அரசு தரப்பில் அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. எனவே பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. புதுவையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் அனைவரும் கரைக்கு திரும்பி விட்டனர். காரைக்காலில் இருந்து மீன்பிடிக்க சென்றவர்களில் 10 பேர் கரை திரும்பியுள்ளனர். 48 பேர் கோடியக்கரையிலும், 5 பேர் ஆந்திராவிலும் பாதுகாப்பாக உள்ளனர். 30 பேரை இன்னும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுகுறித்து கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 30 பேரை தொடர்பு கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது வளர்ச்சி துறை ஆணையர் அன்பரசு மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.