திருப்பரங்குன்றம் அருகே, சாலையோரம் நின்ற லாரி மீது மோதி கண்மாய்க்குள் கவிழ்ந்த ஆம்னி பஸ்- 13 பயணிகள் படுகாயம்
சாலையோரமாக நின்ற லாரி மீது மோதிய ஆம்னி பஸ் கண்மாய்க்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருப்பரங்குன்றம்,
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருந்து கோவில்பட்டிக்கு வெல்ல கட்டி, சீனி, கடலை பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒரு மினி லாரி வந்து கொண்டிருந்தது. மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் வெங்கலமூர்த்தி அய்யனார் கோவில் அருகே திருமங்கலம் - சமயநல்லூர் நான்கு வழிச்சாலையில் வந்தபோது திடீரென்று மினி லாரியின் டயர் வெடித்தது. இதன் காரணமாக மினி லாரியில் வந்த டிரைவர் மற்றும் கிளீனர் லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர். இந்த நிலையில் கோவையில் இருந்து நெல்லை மாவட்டம் திசையன்விளைக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு நேற்று அதிகாலை 3 மணியளவில் ஆம்னி பஸ் ஒன்று வந்தது. திருப்பரங்குன்றம் அருகே சென்ற போது திடீரென ஆம்னி பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த அந்த மினி லாரியின் மீது வேகமாக மோதியது. மேலும் சாலையில் இருந்த தடுப்பு கம்பிகளை இடித்து கொண்டு சென்ற ஆம்னி பஸ் அருகில் இருந்த கண்மாய்க்குள் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஆம்னி பஸ் டிரைவர் கருப்பசாமி (வயது 30), பஸ்சில் பயணம் செய்த உடுமலைப்பேட்டை ரங்கம்மாள் (62), கோவை சந்திரா (73), வளர்மதி (44), தூத்துக்குடி சோமசுந்தரம் (48), ஜெகன் (38), திருப்பூர் தங்கராஜ் (70), விஜய சண்முகம் (32) உள்பட 13 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஆஸ்டின்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதில் 6 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.