லால்குடி அருகே, மூதாட்டி மீது மயக்க மருந்து தெளித்து 12 பவுன் நகை, ரூ.1¾ லட்சம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
லால்குடி அருகே மூதாட்டியின் முகத்தில் மயக்க மருந்து தெளித்து 12 பவுன் நகை, ரூ.1¾ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
லால்குடி,
திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த மாந்துறை பகுதியில் வசித்து வருபவர் டேனியல் சகாயராஜ். வாரச்சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு நீலாவதி என்கிற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அனைவரும் வியாபாரத்திற்கு சென்றுவிட்டனர். அப்போது டேனியல் சகாயராஜின் தாய் மேரி(70) மட்டும் வீட்டில் இருந்தார்.
அவர், வீட்டின் முன்புறம் தூங்கிக்கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் மூதாட்டியின் முகத்தில் மயக்க மருந்து தெளித்து அவரை மயங்க செய்தனர். பின்னர், வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 12 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர்.
இரவு 10 மணியளவில் வீடு திரும்பிய டேனியல் சகாயராஜ் குடும்பத்தினர், மேரி அயர்ந்து தூங்குவது கண்டும், வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு நகைகள், பணம் திருட்டு போய் இருப்பது கண்டும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், நடந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது ஜாபர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கை ரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, மர்ம நபர்களின் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் மூலமும் துப்பு துலக்கப்பட்டது. இதுகுறித்து டேனியல் சகாயராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதுகுறித்து டேனியல் சகாயராஜ் மனைவி நீலாவதி கூறுகையில், நாங்கள் வாரச்சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறோம். திருச்சி மார்க்கெட்டில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் கொள்முதல் செய்த காய்கறிகளுக்கு கொடுப்பதற்காக வீட்டில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் வைத்திருந்தோம். அந்த பணத்தையும், கஷ்டப்பட்டு சேமித்து வைத்திருந்த தங்கச்சங்கிலி, மோதிரம், தோடு உள்பட 12 பவுன் நகைகளையும் மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர் என்று வேதனையுடன் கூறினார்.