மணப்பாறை அருகே புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபரால் பரபரப்பு

வையம்பட்டி அருகே தான் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து வாலிபர் செல்போன் கோபுரத்தில் ஏறி சுமார் 3 மணி நேரம் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-11-23 06:24 GMT
வையம்பட்டி, 

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த அமயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராசுமெய்யர் (வயது 27). பி.இ. படித்துள்ள இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த மொபட் ராசுமெய்யர் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ராசுமெய்யர் வையம்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

இதையடுத்து வேதனை அடைந்த ராசுமெய்யர் நேற்று மதியம் அரசுநிலையப்பாளையம் அருகே உள்ள ஒரு செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். சுமார் 50 அடி உயரத்தில் நின்ற அவர், தான் புகார் கொடுத்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடவடிக்கை எடுத்தால் மட்டுமே செல்போன் கோபுரத்தை விட்டு இறங்கி வருவேன் இல்லையென்றால் குதித்து விடுவேன் என்று கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இதுபற்றி அந்த பகுதி மக்கள் வையம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

தகவலின் பேரில் வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மைக் மூலம் அந்த வாலிபரை கீழே இறங்கி வரும் படி கூறினர். புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். ஆனாலும் வாலிபர் கீழே இறங்கி வரவில்லை. பின்னர் அவரது உறவினர்கள், நண்பர்கள், கிராம மக்கள் என அனைவரும் மைக் மூலம் கீழே வருமாறு கூறியும் அவர் வரமறுத்து விட்டார். அதன் பின்னர் மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி நிலைய அலுவலர் கணேசன் தலைமையிலான தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடையை மாற்றிக் கொண்டு செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு பிருந்தா சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரை கீழே இறங்கி வருமாறும், புகார் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

இதே போல் தீயணைப்பு துறையினரும் மேலே ஏறிச் சென்று அந்த வாலிபரிடம் பேசி கீழே அழைத்து வந்து வையம்பட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன் பின்னர் போலீசார் வாலிபரை வையம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவர் புகார் மீது நடவடிக்கை எடுத்து அனுப்பி வைத்தனர். சுமார் 3 மணிநேரம் நடந்த இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சமயோசிதமாக செயல்பட்ட தீயணைப்பு துறையினர்
செல்போன் கோபுரத்தில் ஏறி ராசுமெய்யர் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்திய நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் அவரை மீட்டு கீழே கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் காக்கி சீருடையில் இல்லாமல் நிலைய அலுவலர் கணேசன் மற்றும் தீயணைப்பு வீரர் முத்துசாமி ஆகியோர் டவுசர், துண்டு மற்றும் தலையில் துண்டை கட்டிக் கொண்டு கிராமத்தில் உள்ளவர்கள் போல் ஏறினர். ஆனால் மேலே சென்றதும் தன் அருகில் வந்தால் கத்தி வைத்திருப்பதாகவும் கையை கிழித்துக் கொள்வேன் என்றும் ராசு மெய்யர் கூறியதால் தீயணைப்பு துறையினர் உச்சிக்கு செல்லாமல் மேல் மட்டத்தில் இருந்து சுமார் 5 அடி தூரத்திலேயே அமர்ந்து கொண்டனர். பின்னர் அந்த வாலிபரிடம் சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக நைசாக பேசி கீழே வரும்படி கூறியதை அடுத்து தீயணைப்பு படையினர் முதலில் இறங்க அதைத் தொடர்ந்து ராசுமெய்யரும் கீழே இறங்கத் தொடங்கினார். தரையில் இருந்து சுமார் 15 அடி தொலையில் வந்ததும் ராசுமெய்யர் மீண்டும் தீயணைப்பு துறையினருக்கு போக்குகாட்டி மேலே ஏற முயன்ற போது அவரை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பிடித்து கீழே இறக்கி கொண்டு வந்ததைப் பார்த்த பொதுமக்கள் கைகளை தட்டியும், விசில் அடித்தும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்