ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அடித்து செல்லப்பட்டனர் காவிரி ஆற்றில் மூழ்கி சேலம் பெண் பலி மகன்-மகளை தேடும் பணி தீவிரம்
சேலத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். இதில் தண்ணீரில் மூழ்கி பெண் பலியானார். மகள், மகனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.
பென்னாகரம்,
சேலம் சுகவனேசுவரர் கோவில் பகுதியை சேர்ந்தவர் ரியாசுதீன் (வயது 45). டிராவல்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர், தனது மனைவி ஆபீதா (38), மகள் அப்ஷா பாத்திமா (15), மகன்கள் முகமது அஸ்வான் (19), முகமது ரபாத் (10) ஆகியோருடன் நேற்று தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தனர். குடும்பத்தினர் அனைவரும் ஒகேனக்கல்லில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். பின்னர் அவர்கள் 5 பேரும் ஆலாம்பாடி காவிரி ஆற்றில் குளித்தனர்.
அப்போது ரியாசுதீன், ஆபீதா, அப்ஷா பாத்திமா, முகமது ரபாத் ஆகிய 4 பேரும் காவிரி ஆற்றில் திடீரென தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த முகமது அஸ்வான் மற்றும் அங்கு இருந்தவர்கள் 4 பேரையும் மீட்க முயன்றனர். இதில் ரீயாசுதீனை மீட்டு அவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர். மற்ற 3 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று ஆபீதா உள்ளிட்ட 3 பேரையும் தேடினர். அப்போது ஆபிதா தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டது தெரியவந்தது. அவருடைய உடலை நாடார் கொட்டாய் பகுதியில் தீயணைப்பு படையினர் மீட்டனர். பின்னர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தீயணைப்பு படையினர், பரிசல் ஓட்டிகள், மீனவர்கள் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட அப்ஷாபாத்திமா, முகமது ரபாத் ஆகிய 2 பேரையும் தீவிரமாக தேடினர். காவிரி ஆற்றில் இருள் சூழ்ந்ததால் 2 பேரையும் தேடும் பணி பாதிக்கப்பட்டது.
இருப்பினும் 2 பேரையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. இதனால் ரியாசுதீனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆலாம்பாடி பகுதியில் காவிரி ஆற்றில் சோகத்துடன் காத்து இருந்தனர். இதுகுறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.