ஒரே குடும்பத்தில் 3 பேர் சுட்டுக்கொலை ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியிடம் போலீஸ் விசாரணை - விற்பனைக்கு கொடுத்த காரில் துப்பாக்கி இருந்ததாக தகவல்

சென்னையில் 3 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை வழங்கியதாக ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியிடம் போலீசார் விசாரித்தனர். விற்பனைக்கு கொடுத்த காரில் தனது துப்பாக்கி இருந்ததாகவும், தானாக கொடுக்கவில்லை எனவும் போலீசாரிடம் அவர் கூறினார்.

Update: 2020-11-22 21:30 GMT
பெரம்பூர்,

சென்னை சவுகார்பேட்டையில் நிதி நிறுவன அதிபர் தலில் சந்த் (வயது 74), அவருடைய மனைவி புஷ்பா பாய் (70), மகன் ஷீத்தல்குமார் (40) ஆகிய 3 பேரும் கடந்த 11-ந் தேதி துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக ஷீத்தல்குமாரின் மனைவி ஜெயமாலாவின் சகோதரர் கைலாஷ், அவரது நண்பர்களான விஜய் உத்தம், ரவீந்திரநாத்கர் ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தற்போது இவர்கள் 3 பேரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் தலைமறைவாக இருந்த ஜெயமாலா, அவரது மற்றொரு சகோதரர் விலாஷ், அவரது கூட்டாளி ராஜீவ் ஷிண்டே ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் செல்போன் சிக்னலை வைத்து டெல்லி ஆக்ராவில் வைத்து கைது செய்தனர். விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்ட 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

இதற்கிடையில் போலீஸ் காவலில் உள்ள கைலாஷ், போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி, தனது நண்பரான ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியான ஜெய்ப்பூரை சேர்ந்த ராஜீவ் துப்பேர் (58) என்பவருடையது என கூறி இருந்தார். இதையடுத்து தனிப்படை போலீசார், அவரை விசாரணைக்கு அழைத்தனர்.

உடனடியாக அவரும் நேற்று சென்னை யானைகவுனி போலீஸ் நிலையம் வந்தார். அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியான அவர், ஜெய்ப்பூரில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலுக்கு கைலாஷ் அடிக்கடி வந்து தங்குவார். இதனால் அவர்கள் இருவருக்கும் 6 வருடங்களுக்கு மேலாக பழக்கம் ஏற்பட்டது. அப்போது ராஜீவ் துப்பேர், தனது காரை விற்க உள்ளதாக கூறினார்.

அதற்கு கைலாஷ், தானே வாங்கிக்கொள்வதாக கூறி காரை வாங்கிக்கொண்டு சொந்த ஊருக்கு சென்றார். அங்குசென்று பார்த்தபோதுதான் காரின் முன்பக்க பெட்டியில் ராஜீவ் துப்பேரின் துப்பாக்கி இருப்பது தெரிந்தது. பின்னர் அந்த துப்பாக்கி தன்னிடம் இருப்பதாக அவருக்கு தகவல் கொடுத்து உள்ளார்.

முறையான உரிமம் பெற்றுள்ள அந்த துப்பாக்கியை தானாக கைலாசுக்கு கொடுக்கவில்லை என அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதில் உண்மை இல்லை என தெரிந்தால் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்