உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதா? கப்பலூர் சுங்கச்சாவடியை வாகன ஓட்டிகள் முற்றுகை
திருமங்கலம் அருகே உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து கப்பலூர் சுங்கச்சாவடியை வாகன ஓட்டிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருமங்கலம்,
திருமங்கலம் அருகே உள்ள கப்பலூரில் சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதில்லை. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக புதிய ஒப்பந்ததாரர் மூலம் சுங்கச்சாவடி கட்டணத்தை வசூலித்து வருகின்றனர். புதிய ஒப்பந்ததாரர் உள்ளூர் வாகனங்களுக்கு திடீரென இலவச கட்டணத்தை ரத்து செய்து கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. இதற்கு உள்ளூர் வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது எனவும் கோரிக்கை விடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மோட்டார் வாகன உரிமையாளர்கள் சங்கம் மற்றும் வாகன ஓட்டிகள் பலர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நடவடிக்கை
இதையடுத்து சுங்கச்சாவடி மேற்பார்வையாளர்கள் வாகன ஓட்டிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் கூறியதை தொடர்ந்து வாகன ஓட்டிகள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர். இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு இந்த பகுதியில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. நகர பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டருக்கு தொலைவில்தான் சுங்கச்சாவடி அமைக்க வேண்டும் என விதிமுறை இருந்தும், 2 கிலோமீட்டர் தூரத்தில் இந்த சுங்கச்சாவடி அமைந்துள்ளதால் இந்த பிரச்சினை அடிக்கடி ஏற்படுவதாக கூறினர்.