கோவையில் விவசாயிகள் பாதுகாப்பு எழுச்சி மாநாடு: தமிழகத்தில் திருப்பத்தை ஏற்படுத்தும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் சஞ்சய்தத் பேட்டி

கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெறும் விவசாயிகள் பாதுகாப்பு எழுச்சி மாநாடு தமிழகத்தில் திருப்பத்தை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சஞ்சய்தத் கூறினார்.

Update: 2020-11-22 03:06 GMT
கருமத்தம்பட்டி, 

மத்திய பா.ஜ.க. அரசின் விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக 22-ந் தேதி (இன்று) பிற்பகல் 3 மணியளவில் கோவையை அடுத்த கருமத்தம்பட்டியில் விவசாயிகள் பாதுகாப்பு எழுச்சி மாநாடும், மாலை 5.30 மணியளவில் மாபெரும் ஏர் கலப்பை பேரணியும் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டிற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்குகிறார். அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கலந்து கொண்டு பேசுகிறார். மேலும், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சஞ்சய் தத், ஸ்ரீவெல்லபிரசாத் மற்றும் சசிகாந்த் செந்தில் உள்ளிட்ட முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் பலர் விளக்கி பேசுகின்றனர்.

மாநாட்டில், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள், செயல் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் கள், மாநில, மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், பல்வேறு துறைகளின் தலைவர்கள், நிர்வாகிகள், விவசாயிகள் பங்கேற்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை கோவை வந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் சஞ்சய்தத் மாநாடு நடைபெறும் இடத்தை பார்வையிட்டார். மேலும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் ரங்கராஜன் மோகன் குமாரமங்கலம், மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் வி.எம்.சி மனோகரன் ஆகியோரிடம் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து அவர், நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவையில் நடைபெறும் விவசாயிகள் பாதுகாப்பு எழுச்சி மாநாட்டிலும், ஏர் கலப்பைப் பேரணியிலும் பெருந்திரளான விவசாயிகள் பங்கேற்கிறார்கள். இது தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகையால் தமிழகத்தில் எந்த வித மாறுதல்களும் ஏற்பட போவதில்லை. ஆளும் கட்சியினர் நடத்தும் விழாக்களில் எந்த வித அரசு விதிமுறைகளும் பின்பற்றப்படுவதில்லை, அதே நேரத்தில் தி.மு.க., காங்கிரஸ் போன்ற கட்சியினர் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுத்து கைது நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். மேலும் மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் மத்திய அரசின் கைப்பாவையாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் ஆகியோர் செயல்படுகின்றனர். ஆகவே இவர்கள் தலைமையிலான அ.தி.மு.க. அரசை தமிழகத்தில் மக்கள் ஓரம் கட்டும் காலம் விரைவில் வந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கங்கா கணேஷமூர்த்தி, ஆர்.பி. முருகேசன், திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் கோபி, ஏ.ஐ.சி.சி.உறுப்பினர் சரவணக் குமார், சிறுபான்மை பிரிவின் மாநில துணை தலைவர் சித் திக், வி.எம். ரங்கசாமி, தீரன் கந்தசாமி, நகர தலைவர்கள் சோமனூர் பாலு, சாமளாபுரம் பாலசந்தர் மற்றும் மாவட்ட, வட்டார காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்