சி.பி.ஐ. விசாரணை நடத்த மாநில அரசின் ஒப்புதல் தேவை: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு மராட்டிய அரசு வரவேற்பு

சி.பி.ஐ. விசாரணை நடத்த மாநில அரசு ஒப்புதல் தேவை என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவிற்கு மராட்டிய அரசு வரவேற்று உள்ளது.

Update: 2020-11-20 21:58 GMT
மும்பை, 

சி.பி.ஐ. ஒரு மாநிலத்தில் ஏதாவது வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தினால், அதற்கு சம்மந்தப்பட்ட மாநிலத்திடம் கண்டிப்பாக ஒப்புதல் பெற வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு மராட்டிய மந்திரிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளார்.

இது குறித்து மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

அரசியல் லாபத்திற்காக...

அரசியல் லாபத்திற்காக தவறாக பயன்படுத்துவதால், சி.பி.ஐ. மாநிலத்தி்ல் விசாரணை நடத்த வழங்கப்பட்டு இருந்த பொது அனுமதியை மராட்டிய அரசு ரத்து செய்து இருந்தது. தற்போது சுப்ரீம் கோர்ட்டும் மாநிலங்களில் எந்த ஒரு வழக்கு விசாரணையை தொடங்கும் முன் சி.பி.ஐ. முன்அனுமதி பெற வேண்டும் என உத்தரவிட்டு இருப்பதை நாங்கள் வரவேற்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பான் கடை

மற்றொரு மந்திரியான அஸ்லாம் ஷேக், சி.பி.ஐ.யையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

மத்தியில் பா.ஜனதா ஆட்சியின் கீழ் சி.பி.ஐ. பான் கடை போல் ஆகிவிட்டது. பான் கடைக்குள் யார் வேண்டுமானாலும் எளிதில் செல்லலாம். அப்படித்தான் சி.பி.ஐ. ஆட்டுவிக்கப்படுகிறது. பா.ஜனதா ஆட்சி நடக்காத மாநிலங்களுக்கு படையெடுக்க சி.பி.ஐ. ஏவப்படுகிறது. சி.பி.ஐ.யும் யார் மீது வேண்டுமானாலும் வழக்கு பதிகிறது, எவரை வேண்டுமானால் கைது செய்கிறது. அரசியல் ஆதாயத்துக்காக சி.பி.ஐ. அமைப்பு மத்திய அரசால் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது. ஆகையால் சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவை நாங்கள் வரவேற்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்