உடன்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கைது
உதயநிதி ஸ்டாலினை போலீசார் கைது செய்ததை கண்டித்து நேற்று உடன்குடி பஜாரில் சாலை மறியலில் ஈடுபட்ட அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார்.
உடன்குடி,
தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தை திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் நேற்று தொடங்கினார். கொரோனா தடை காலம் இருப்பதால் அவரை போலீசார் கைது செய்தனர். அவர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், உடனடியாக அவரை விடுதலை செய்யக் கோரியும் உடன்குடி மெயின் பஜாரில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், திருச்செந்தூர் எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனிதா ராதாகிருஷ்ணன் கைது
அப்போது அவரும், தி.மு.க.வினரும் அ.தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, உடன்குடி பஞ்சாயத்து யூனியன் சேர்மன் பாலசிங், உடன்குடி நகர செயலாளர் ஜாண்பாஸ்கர், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள் ரவிராஜா, இளங்கோ, மாவட்ட சிறுபான்மை அணி சிராசுதீன், மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ், முன்னாள் கவுன்சிலர்சலீம் மற்றும் தங்கம், திரவியம், அஜய், வக்கீல் கிருபாகரன் உட்பட 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினரை குலசேகரன்பட்டினம் போலீஸ்ார் கைது செய்தனர்.
அவர்கள் அனைவரும் உடன்குடியிலுள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இரவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.