சிவகாசியில் துணிகரம்: அச்சக அதிபர் குடும்பத்தினரை கட்டிப்போட்டு 35 பவுன் நகை - பணம் கொள்ளை - மற்றொரு வீட்டிலும் மர்ம கும்பல் கைவரிசை
சிவகாசியில் வீடு புகுந்து அச்சக அதிபர் குடும்பத்தினரை கட்டிப்போட்டு 35 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடிவருகிறார்கள். இதே கும்பல் மற்றொரு வீட்டிலும் கைவரிசை காட்டியுள்ளது.
சிவகாசி,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி நகராட்சிக்கு உட்பட்ட அண்ணாமலையார் காலனியில் 7-வது தெருவில் வசித்து வருபவர், நந்தகுமார் (வயது 48). அச்சக அதிபரான இவர், நேற்று முன்தினம் இரவில் தனது வீட்டில் மனைவி சித்ராதேவி (46), மகன்கள் விஜயஅர்ஜூன் (23), அஜய்கார்த்திக் (16) ஆகியோருடன் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 1.30 மணி அளவில் வீட்டின் பின்பக்க சுவர் வழியாக ஏறி உள்ளே குதித்த 3 பேர் கும்பல் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்தனர்.
முதலில் சித்ராதேவி, அவருடைய மகன் அஜய்கார்த்திக் ஆகியோர் படுத்து இருந்த அறைக்குள் சென்று அங்கிருந்தவர்களை கத்தி முனையில் மிரட்டி, அவர்களது கை, கால்களை கட்டிப்போட்டு அவர்களிடம் இருந்த தங்க நகைகளை பறித்துள்ளனர். அதாவது, சித்ராதேவி அணிந்து இருந்த 16 பவுன் தாலிச்சங்கிலி, 6 பவுன் வளையல், 5 பவுன் எடைகொண்ட மற்றொரு சங்கிலி ஆகியவற்றை பறித்துள்ளனர்.
இதற்கிடையே அச்சக அதிபர் நந்தகுமார் தனது அறையில் இருந்து எழுந்து மனைவியின் அறைக்கு சென்றுள்ளார். அப்போது அவரின் முகத்தை துணியால் மூடிய கொள்ளை கும்பல், அவரையும் கட்டிப்போட்டனர். பின்னர் அருகில் உள்ள இன்னொரு அறைக்கு சென்று அங்கு படுத்து இருந்த விஜயஅர்ஜூனை மிரட்டி, அவரின் 8 பவுன் சங்கிலியை பறித்துள்ளனர். மொத்தம் 35 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு, பீரோவில் வைத்திருந்த ரூ.60 ஆயிரத்தையும் எடுத்துக்கொண்டு அந்த கும்பல் தப்பிச் சென்றுவிட்டது.
இதற்கிடையே விஜய அர்ஜூன் தனது கை, கால் கட்டுகளை அவிழ்த்துவிட்டு, தந்தை, தாய், தம்பி இருந்த அறைக்கு வந்து அவர்களையும் கட்டுகளில் இருந்து விடுவித்தார். பின்னர் இந்த துணிகர கொள்ளை குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி, மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். நந்தகுமாரிடம் கொள்ளை குறித்து விசாரணை நடத்தினர். கொள்ளையர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாண்டி, பாலமுரளி கிருஷ்ணன், போத்தி ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த தடயங் களை போலீசார் பதிவு செய்தனர். விருதுநகரில் இருந்து மோப்பநாய் ராக்கி வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அந்த வீட்டை விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாள் நேரில் பார்வையிட்டார்.
கொள்ளை நடந்த வீட்டின் அடுத்த தெருவில் முருகன் என்ற பசை வியாபாரியின் வீடு உள்ளது. முருகன் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்று இருந்த நிலையில் அவரது வீட்டின் கதவும் உடைக்கப்பட்டு இருந்தது. அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து முருகனுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் உடனே வீட்டுக்கு வந்தார். அப்போது பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேற்கண்ட 2 வீடுகளிலும் ஒரே கும்பல்தான் கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவங்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தின.