பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி 4 பேருக்கு வலைவீச்சு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே முகமூடி அணிந்து வந்த 4 நபர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-11-18 05:14 GMT
பொம்மிடி, 

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மூக்காரெட்டிப்பட்டியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கி வளாகத்தில் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு முகமூடி அணிந்தவாறு மர்ம நபர்கள் 4 பேர் ஏ.டி.எம். மையத்திற்கு வந்தனர். அவர்களில் 2 பேர் மையத்திற்குள் புகுந்தனர். மற்ற 2 பேர் வெளியே பாதுகாப்புக்காக நின்று இருந்தனர். ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்தவர்கள் டிரில்லிங் மெசின் மூலம் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர்.

சத்தம் கேட்டு அருகில் குடியிருந்த பழனி, இவருடைய மனைவி தென்றல் ஆகியோர் பக்கத்து வீட்டுக்காரர் கதிரவன் என்பவருக்கு போன் மூலம் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர் ஏ.டி.எம். மையத்திற்கு வந்து கதவை மூடி உள்ளார். அப்போது பாதுகாப்புக்கு இருந்த 2 பேர் கதிரவனை பிடித்து வைத்து கொண்டு கதவை திறந்துள்ளனர். பின்னர் அவர்கள் 4 பேரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

இதுகுறித்து ஏ.பள்ளிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மணி, இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர்.

இந்த கொள்ளை முயற்சி குறித்து ஏ.பள்ளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் ஏ.டி.எம். மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் கொடுத்த தகவலின் பேரில் ஏ.டி.எம். மையத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது. ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை அடிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்