கடமலைக்குண்டு அருகே கார், டி.வி. பரிசு விழுந்ததாக கூறி பெண்ணிடம் ரூ.90 ஆயிரம் மோசடி - போலீசார் விசாரணை

கடமலைக்குண்டு அருகே கார், டி.வி., பரிசு விழுந்ததாக கூறி பெண்ணிடம் ரூ.90 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-11-18 02:47 GMT
கடமலைக்குண்டு,

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள குமணன்தொழு, மண்ணூத்து, காமன்கல்லூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு கடந்த மாதம் சிலர் வேனில் வந்தனர். அப்போது அவர்கள், சில தனியார் நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்ட கியாஸ் அடுப்பு, மிக்சி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்தனர். விலை மிகவும் குறைவாக இருந்ததால், ஏராளமான பொதுமக்கள் அந்த பொருட் களை ஆர்வத்துடன் பணம் கொடுத்து வாங்கினர்.

அப்போது பொருட்கள் வாங்கிய பொதுமக்களிடம், செல்போன் எண் மற்றும் விலாசத்தை அவர்கள் கேட்டு பெற்றுள்ளனர். இதுதொடர்பாக சிலர் சந்தேகப்பட்டு கேட்டு உள்ளனர். அதற்கு, தங்கள் நிறுவனத்தின் சார்பில் விரைவில் பரிசு குலுக்கல் நடைபெற போவதாகவும், அதில் பொருட்கள் வாங்கிய சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பொருட்கள் வாங்கிய பொதுமக்கள் ஆர்வத்தில் தங்களது செல்போன் எண்களை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கியாஸ் அடுப்பு வாங்கியிருந்த குமணன்தொழு கிராமத்தை சேர்ந்த ஒருபெண்ணின் செல்போன் எண்ணுக்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், குலுக்கலில் உங்களது பெயருக்கு 6 பவுன் தங்கம், டி.வி. மற்றும் கார் பரிசு விழுந்துள்ளது எனவும், அந்த பரிசுகளை உங்களது வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றால் ஜி.எஸ்.டி., கார் இன்சூரன்ஸ் உள்ளிட்ட தேவைகளுக்கான ரூ.1 லட்சம் வரை செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதை உண்மை என நம்பிய அந்த பெண், தனது கணவர் உதவியுடன் குறிப்பிட்ட ஒரு வங்கி கணக்கு மூலம் 3 தவணைகளாக மொத்தம் ரூ.90 ஆயிரம் வரை செலுத்தினார். இந்த நிலையில் பணம் செலுத்தி ஒரு வாரம் ஆகியும் தற்போது வரை வீட்டிற்கு பரிசுகள் அனுப்பி வைக்கப்படவில்லை. இதனையடுத்து அந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு கேட்டபோது, இன்னும் ரூ.14 ஆயிரம் அனுப்ப வேண்டும் என அந்த நபர் தெரிவித்துள்ளார்.

இதனால் சுதாரித்துக்கொண்ட அந்த பெண், இந்த மோசடி தொடர்பாக மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்