நீர்மட்டம் 22 அடியை எட்டினால் மட்டுமே திறக்க முடிவு: ‘செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது உபரி நீர் திறக்க வாய்ப்பில்லை’ பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தகவல்
‘செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 22 அடியை எட்டினால் மட்டுமே திறக்க முடிவு’ செய்துள்ளதாகவும், தற்போது தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என்றும் சென்னை மண்டல தலைமை பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
பூந்தமல்லி,
தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பெய்யத்தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. அதிலும் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக மாவட்ட ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சென்னை மக்களின் நாவுகளில் அடிக்கடி உச்சரிக்கப்படும் பெயர்களில் ஒன்றாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. ஏனென்றால் கடந்த 2015-ம் ஆண்டு பெய்த கனமழையின் போது, சென்னை மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதே அதற்கு முக்கிய காரணம். தற்போது கனமழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து காரணமாக அதிக அளவு நீர் நிறைந்து கடல் போல் ரம்மியமாக காணப்படுகிறது.
இதனால் எந்த நேரத்திலும் மொத்தம் 24 அடி நீர்மட்டம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்படலாம் என்று தகவல் வெளியானது.
இந்த நிலையில் ஏரியின் நீர்மட்டம் மற்றும் மதகுகள் எப்படி உள்ளது என்பது குறித்து சென்னை மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அசோகன் செம்பரம்பாக்கம் ஏரியில் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது.
இன்று(அதாவது நேற்று) மழைப்பொழிவு இல்லாதநிலையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு தற்போது நீர்வரத்து குறைந்துள்ளது. தற்போது ஏரிக்கு 480 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டம் உயரம் 21.17 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2,898 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.
இதன்பின்னர், மழை பொழிந்து ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து, நீர் மட்டம் 22 அடியை தொட்டால் மட்டுமே ஏரியில் இருந்து உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளது. தற்போது ஏரியில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை. எனவே தண்ணீர் திறப்பு குறித்து, பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும், முறையான அறிவிப்பு கொடுத்த பின்னர் தான் உபரி நீர் திறக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தநிலையில், ஏரியில் நீர் நிறைந்து ரம்மியமாக காணப்படுவதாலும், நேற்று மாலை வரை மழை இல்லாத காரணத்தாலும், ஏராளமான பொதுமக்கள் தங்கள் குடும்பங்களுடன் ஏரிக்கு சென்று ரசித்து தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பொதுமக்கள் வருகை அதிகரித்துள்ளதையடுத்து, அந்த சாலையின் அருகே சிலர் கடைகள் அமைத்துள்ளனர். ஏரியில் நீர்நிறைந்து காணப்படுவதால் மீனவர்கள் வலைகள் வீசி மீன்களை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மழை இல்லாவிட்டாலும் தொடர்ந்து ஏரியை கண்காணிக்கும் பணியில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, உபரி நீர் திறக்கப்பட்டால் திருமுடிவாக்கம், வழுதலம்பேடு, சிறுகளத்தூர் ஆகிய பகுதிகளில் பாதிப்பு ஏற்படும் என்பதால், அங்கு தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை வருவாய்த்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
பொதுப்பணி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி ஒரு ஹெலிகாப்டர் 2 முறை வட்டமடித்தபடி பறந்து சென்றது குறிப்பிடத்தக்கது.