ஆவடி பட்டாபிராம் பகுதிகளில் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

ஆவடி பட்டாபிராம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் மழையால் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2020-11-17 22:56 GMT
ஆவடி, 

ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயல், திருநின்றவூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பல இடங்களில் தெருக்கள் வெள்ளக்காடாக மாறியதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதையடுத்து ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரங்களால் விளிஞ்சியம்பாக்கம் ஏரி உபரி நீர் கால்வாய், பருத்திப்பட்டு ஏரி உபரி நீர் கால்வாய்களில் அடைப்பை நீக்கியும், அகலப்படுத்தியும் வருகின்றனர். இந்நிலையில் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 18-வது வார்டு சரஸ்வதி நகர் மற்றும் சங்கர் நகர், 2-வது பிரதான சாலைகளில் உள்ள தெருக்களில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள பல வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.

இதேபோல் ஆவடி மாநகராட்சி 38-வது வார்டுக்கு உட்பட்ட பட்டாபிராம், மேற்கு கோபாலபுரம், குறிஞ்சி மாநகர், தென்றல் நகர் உள்ளிட்ட பகுதியில் குடியிருப்பை சுற்றிலும் தெருக்களில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.

இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்குக்கூட வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது.

ஆவடி மாநகராட்சி பகுதியில் 5 இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்க கடந்த ஆண்டு ரூ.27.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இப்பணி தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் டெண்டர் விடப்பட்டு ஜூன் மாதம் பணிகள் தொடங்கி மந்தமாக நடைபெற்று வருவதால் பல இடங்களில் கால்வாய் பணிகள் முடிவுறாமல் பாதியில் நிற்கின்றன.

இதனால் மழை நீர் தேங்கி பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. அதிக அளவில் மழை பொழிந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்து வர்தா புயல் மற்றும் கஜா புயல் காலங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை போன்று தற்போது ஏற்படாமல் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்