தனிப்பட்டாவுக்கு 40 ஆண்டுகளாக காத்திருக்கும் கிராம மக்கள் அதிகாரிகள் அலைக்கழிப்பதாக கலெக்டர் அலுவலகத்தில் புகார்

தனிப்பட்டாவுக்காக 40 ஆண்டுகளாக நல்லூர் வருவாய் கிராம மக்கள் காத்திருக்கின்றனர். பலமுறை மனுக்கள் அளித்தும் அலைக்கழிப்பதாக கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

Update: 2020-11-17 05:45 GMT
நாகர்கோவில்,

மருங்கூர் ஆத்தியடி பகுதியை சேர்ந்த ஊர்மக்கள் சிலர், நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நல்லூர் வருவாய் கிராமத்தில் 1960-ம் ஆண்டு ஆதிதிராவிடர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. அந்த நிலத்துக்கு 1961-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜர் கூட்டுப்பட்டா வழங்கினார். இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் இன்றுவரை எங்களுக்கு தனி பட்டா வழங்கப்படவில்லை. தற்போது அங்கு வசிக்கும் அனைவரும் அரசு விதிகளின்படி ஆதிதிராவிட சமுதாயத்தை சேர்ந்தவர்களே.

தனிபட்டா வேண்டி கடந்த ஆண்டு ஜமாபந்தியில் மனு அளிக்கப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு சுதந்திர தினவிழாவின் போது எங்களுக்கு தனிப்பட்டா வழங்கப்படும் என அப்போதைய கலெக்டர் உறுதியளித்தார். பின்னர் தாசில்தார்கள் மற்றும் அதிகாரிகள் வீடு, வீடாக சென்று ஆய்வு நடத்தினர்.

அதன்பிறகு எந்தவித முன்னேற்றமும் இல்லை. இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறையிடம் கேட்டபோது, பணியாளர்கள் வெளியே சென்றுள்ளனர். அதிகாரிகள் இல்லை என காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே ஆத்தியடி ஆதிதிராவிடர் காலனியில் குடியிருப்போர் வீடுகளுக்கு தனிபட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

கடந்த 40 ஆண்டுகளாக தனிப்பட்டாவுக்காக காத்திருக்கும் மக்கள் அதிகாரிகள் அலைக்கழிப்பதாக கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்