திருப்பூரில் சரக்கு ஆட்டோவில் கொண்டு வந்த 530 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - மளிகைக்கடைக்காரர் உள்பட 2 பேர் கைது

திருப்பூரில் சரக்கு ஆட்டோவில் கொண்டு வந்த 530 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, மளிகைக்கடைக்காரர் உள்பட 2 பேரை கைது செய்தனர்.

Update: 2020-11-17 06:15 GMT
திருப்பூர், 

திருப்பூர் மாநகர பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்ய திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தனிப்படை அமைத்து போலீசார் தேடுதல் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான தனிப்படை போலீசார் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி ராயபுரம் ரவுண்டானா பகுதியில் நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

அவற்றை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் திருப்பூர் ராயபுரம் ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்த தங்கராஜ் (வயது 37) என்பவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். அவருடைய கடையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த மதன்குமார் (21) சரக்கு ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார். கோவையிலிருந்து புகையிலை பொருட்களை வாங்கி மொத்தமாக பதுக்கி வைத்து பின்னர் இருவரும் சேர்ந்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து தங்கராஜ், மதன் குமார் ஆகியோரை திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொத்தம் 530 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் சரக்கு ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.12 லட்சம் ஆகும்.

மேலும் செய்திகள்