மலேசியாவில் இறந்த ‘கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யுங்கள்’ - கலெக்டரிடம் மனு
மலேசியாவில் இறந்த கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யுமாறு அவரது மனைவி ராமநாதபுரம் கலெக்டரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை மனு கொடுத்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே உள்ள குயவன்குடியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். இவரது மனைவி ரோஜாராணி. இந்த நிலையில் ரோஜாராணி மற்றும் அவரது குடும்பத்தினர் ராமநாதபுரம் கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவரை சந்தித்து கண்ணீர் மல்க ஒரு கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது கணவர் வெங்கடேஸ்வரன் மலேசியாவில் உள்ள ஓட்டல் ஒன்றில் கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி இரவு திடீரென்று இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். அவர் எப்படி இறந்தார்? அங்கு அவருக்கு என்ன நடந்தது? என்பது போன்ற விவரங்கள் தெரியவில்லை.
அவரது மரணத்தில் மர்மம் உள்ளது. அதன் உண்மை நிலையை கண்டறிவதோடு எனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர ஏற்பாடு செய்ய வேண்டும். வறுமையில் வாடும் எனக்கு அரசு உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.