ஜலகண்டாபுரம் அருகே மெக்கானிக் கொலை: ‘காதலியை திருமணம் செய்ய விடாமல் தடுத்ததால் வெட்டிக்கொன்றோம்’ - கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

ஜலகண்டாபுரம் அருகே, மெக்கானிக் கொலை வழக்கில் கைதான வாலிபர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், காதலியை திருமணம் செய்ய விடாமல் தடுத்ததால் வெட்டிக்கொன்றோம், என கூறியுள்ளார்.

Update: 2020-11-16 22:00 GMT
மேச்சேரி, 

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள செலவடை அரியாம்பட்டி மாரிவளவு பகுதியை சேர்ந்தவர் அருள்குமார் (வயது 27). இவர் நாமக்கல் முதலைப்பட்டியில் மோட்டார்சைக்கிள் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.

இவரது உறவினர் மகளை அதே ஊரை சேர்ந்த பாஸ்கர் என்பவர் காதலித்து வந்ததாகவும், இதற்கு அருள்குமார் எதிர்ப்பு தெரிவித்து காதலுக்கு இடையூறாக இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அருள்குமாருக்கும், பாஸ்கருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகை அன்று சொந்த ஊருக்கு வந்திருந்த அருள்குமார் மாரிவளவு மாரியம்மன் கோவில் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அரிவாளால் அருள்குமாரை வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜலகண்டாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொலை வழக்கு தொடர்பாக ஜலகண்டாபுரம் அருகே செலவடை அரியாம்பட்டி மாரிவளவு பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (21), நங்கவள்ளி சமட்டியூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்த ஹேம்நாத் (20) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர்.

கைதான பாஸ்கர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான் அருள்குமார் உறவினர் பெண்ணை காதலித்து வந்தேன். இந்த காதலுக்கு அருள்குமார் இடையூறாக இருந்து வந்தார். இதனால் எங்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு அவரது உறவினர் பெண்ணை நான் திருமணம் செய்வதற்காக அழைத்துச் சென்றேன். இந்த தகவலறிந்து எங்கள் இருவரையும் திருமணம் செய்ய விடாமல் தடுத்து எங்களை பிரித்து வைத்து விட்டார். அவர் எங்கள் திருமணத்திற்கு தடையாக இருந்தார். எனவே அவரை கொலை செய்ய வேண்டும் என்று நானும், எனது நண்பர் ஹேம்நாத்தும் திட்டம் போட்டோம். இந்தநிலையில் மாரிவளவு அருகே அருள்குமார் நின்று கொண்டிருந்தபோது அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டோம்.

இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்