திருநள்ளாறு கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்
திருநள்ளாறு கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் கமலக்கண்ணன் ஆலோசனை நடத்தினார்.
காரைக்கால்,
காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.22 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. இதையொட்டி காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா தலைமையில் திருநள்ளாறு கோவிலில் முதல் கட்ட ஆலோசனை கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது.
இந்த நிலையில் 2-ம் கட்ட ஆலோசனை கூட்டம் நேற்று காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். கலெக்டர் அர்ஜூன் சர்மா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகா பட், கோவில் நிர்வாக அதிகாரியும், மாவட்ட துணை கலெக்டருமான ஆதர்ஷ், துணை கலெக்டர் (பேரிடர் மேலாண்மை) பாஸ்கரன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
தற்போது கொரோனா காலம் என்பதால், மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதல் மற்றும் சுகாதாரத்துறை வழிகாட்டுதலின் படியும் சனிப்பெயர்ச்சி விழாவை நடத்துவது, அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் செய்யவேண்டிய பணிகள் குறித்தும் அமைச்சர் கமலக்கண்ணன் ஆலோசனை நடத்தினார்.
விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கொரோனா காலங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.