வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: நாகை மாவட்டத்தில் 13 லட்சத்து 4 ஆயிரத்து 747 வாக்காளர்கள்
நாகை மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 13 லட்சத்து 4 ஆயிரத்து 747 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.
நாகப்பட்டினம்,
நாகையில் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
பின்னர் அவர் கூறியதாவது:- நாகை மாவட்டத்தில் உள்ள நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி நாகையில் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 93 ஆயிரத்து 162 பேரும், பெண் வாக்காளர்கள் 98 ஆயிரத்து 729 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 7 பேரும் என மொத்தம் 1 லட்சத்து 91 ஆயிரத்து 898 வாக்காளர்கள் உள்ளனர்.
கீழ்வேளூர்
கீழ்வேளூர் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 84 ஆயிரத்து 902 பேரும், பெண் வாக்காளர்கள் 88 ஆயிரத்து 205 பேரும் என மொத்தம் 1 லட்சத்து 73 ஆயிரத்து 107 வாக்காளர்கள் உள்ளனர்.
வேதாரண்யம் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 91 ஆயிரத்து 801 பேரும், பெண் வாக்காளர்கள் 94 ஆயிரத்து 809 பேரும் என மொத்தம் 1 லட்சத்து 86 ஆயிரத்து 610 வாக்காளர்கள் உள்ளனர். சீர்காழி தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 20 ஆயிரத்து 329 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 23 ஆயிரத்து 310 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 12 வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 43 ஆயிரத்து 651 வாக்காளர்கள் உள்ளனர்.
மயிலாடுதுறை தொகுதி
மயிலாடுதுறை தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 19 ஆயிரத்து 445 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 21 ஆயிரத்து 480 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 18 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரத்து 943 வாக்காளர்களும் உள்ளனர். பூம்புகார் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 32 ஆயிரத்து 978 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 35 ஆயிரத்து 556 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 4 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 68 ஆயிரத்து 538 வாக்காளர்கள் உள்ளனர். நாகை மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 6 லட்சத்து 42 ஆயிரத்து 617 பேரும், பெண் வாக்காளர்கள் 6 லட்சத்து 62 ஆயிரத்து 89 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 41 வாக்காளர்கள் என மொத்தம் 13 லட்சத்து 4 ஆயிரத்து 747 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பும் 18 வயது நிரம்பிய நபர்கள் வருகிற 21, 22 தேதிகளிலும், டிசம்பர் மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளிலும் நடைபெறும் சிறப்பு முகாம்களில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.