வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: மாவட்டத்தில் 22 லட்சத்து 60 ஆயிரத்து 439 வாக்காளர்கள் 43 ஆயிரத்து 115 பேர் நீக்கம்
திருச்சி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 22 லட்சத்து 60 ஆயிரத்து 439 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். 43 ஆயிரத்து 115 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி,
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்பேரில், திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 2020-ம் ஆண்டின் புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று கலெக்டர் சிவராசு அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
அப்போது கலெக்டர் சிவராசு கூறியதாவது:-
திருச்சி மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக இடம் பெற்றுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலின்படி, ஆண் வாக்காளர்கள் 10 லட்சத்து 99 ஆயிரத்து 977 பேரும், பெண் வாக்காளர்கள் 11 லட்சத்து 60 ஆயிரத்து 256 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 206 பேரும் என மொத்தம் 22 லட்சத்து 60 ஆயிரத்து 439 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, உரிய விசாரணை செய்து வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல், திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பிறகு 2,974 ஆண்கள், 3,468 பெண்கள், 6 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 6 ஆயிரத்து 448 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாய்லர்ஆலை, துப்பாக்கி தொழிற்சாலை, பொன்மலை ரெயில்வே பகுதிகளில் பணிபுரிந்த சில பணியாளர்கள் அந்த முகவரிகளில் குடியிருக்கவில்லை என அரசியல் கட்சிகளிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது.
43 ஆயிரத்து 115 பேர் நீக்கம்
அதன்அடிப்படையில் களப்பணி மேற்கொள்ளப்பட்டு, இடம் பெயர்ந்தவர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டது. அவ்வாறு நீக்கம் செய்யப்பட்டவர்கள் விவரங்கள் இன்று (நேற்று) வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலில் சம்பந்தப்பட்ட பெயரில் இறப்பு அல்லது இடமாற்றம் என இடம் பெற்றிருக்கும் என்ற விபரம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரிடம் தெரிவிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவற்றில் ஏதேனும் தவறுதலாக நீக்கம் செய்யப்பட்டு இருப்பின் எதிர்வரும் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2021-ல் மனு அளித்து வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். இவ்வாறாக 21, 897 ஆண்கள், 21, 209 பெண்கள் மற்றும் 9 மூன்றாம் பாலினத்தவர் என 43 ஆயிரத்து 115 மொத்த வாக்காளர்கள் இறப்பு, இடமாற்றம் மற்றும் இரட்டைப்பதிவு காரணமாக பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியல்
வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அலுவலக நேரத்தில் வைக்கப்பட்டிருக்கும். வரும் 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியை தகுதி ஏற்ப நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான ஆட்சேபனைகளை இன்று (நேற்று) முதல் அடுத்த மாதம் 15-ந் தேதி வரை தெரிவித்துக்கொள்ளலாம். மேலும், அனைத்து வேலை நாட்களிலும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலம் படிவம் 6, 7, 8 மற்றும் 8ஏ பெறப்படும். வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2021 தொடர்பான சிறப்பு முகாம்கள் வரும் 21-ந் தேதி (சனிக்கிழமை), 22-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் அடுத்த மாதம் 12-ந் தேதி (சனிக்கிழமை), 13-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 4 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்துகொள்ள வேண்டும். இன்று (நேற்று) முதல் அடுத்த மாதம் 15-ந் தேதி வரை சிறப்பு சுருக்கமுறை திருத்தங்களின்போது, பெறப்பட்ட அனைத்து மனுக்களின் பேரில் ஆட்சேபனைகள் பெறப்பட்டு உரிய விசாரணை செய்து, ஜனவரி மாதம் 5-ந் தேதி இறுதி செய்யப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 20-ந் தேதி இந்திய தேர்தல் ஆணைய உத்தரவு படி வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார், மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன், வருவாய் கோட்டாட்சியர் விசுவநாதன், தேர்தல் தனி தாசில்தார் முத்துசாமி மற்றும் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க., காங்கிரஸ் உள்பட பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.