கிருஷ்ணகிரி அருகே கன்டெய்னர் லாரி மோதி பெயிண்டர் பலி நண்பர் படுகாயம்

கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதி பெயிண்டர் பலியானார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.

Update: 2020-11-16 06:14 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியை அடுத்த பாலகுறி கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சய்பிரசாந்த் (வயது 20). அதே ஊரை சேர்ந்தவர் அனித்குமார்(20). பெயிண்டர்களான இவர்கள் 2 பேரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் மோட்டார்சைக்கிளில் கிருஷ்ணகிரி-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் அவதானப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை சஞ்சய்பிராசந்த் ஓட்டி சென்றார். பின்னால், அனித்குமார் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி, மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சஞ்சய்பிரசாந்த் தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். அனித்குமார் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி டேம் போலீசார் விரைந்து வந்து இறந்த சஞ்சய்பிரசாந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கணேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்