மதுரை ஜவுளிக் கடை தீ விபத்தில் 2 தீயணைப்பு வீரர்கள் பலியானது எப்படி? உருக்கமான தகவல்கள்
மதுரையில் ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றபோது கட்டிடம் இடிந்து விழுந்து 2 தீயணைப்பு வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது பற்றிய உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
மதுரை,
மதுரையில் தீபாவளி பண்டிகையையொட்டி மாசி வீதிகளில் மக்கள் கூட்டம், கூட்டமாக பொருட்கள் வாங்க குவிந்தனர். இதன் காரணமாக தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் இரவு 12 மணி வரை அனைத்து கடைகளும் திறந்திருந்தன.
மதுரை தெற்குமாசி வீதி நவபத்கானா தெருவில் ஸ்ரீராம் என்பவருக்கு சொந்தமான பழமையான கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தை பாபுலால் (வயது 61) என்பவர் வாடகைக்கு எடுத்து ஜவுளிக்கடை நடத்தி வந்தார். தீபாவளிக்கு முந்தைய நாளில் வியாபாரத்தை முடித்து விட்டு பாபுலால் மற்றும் சக பணியாளர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர். அதிகாலை 2.45 மணியளவில் அந்த ஜவுளிக்கடையில் தீப்பிடித்து கரும்புகை வெளிவரத்தொடங்கியது. இதனை கண்ட அக்கம் பக்கத்தை சேர்ந்த கடைக்காரர்கள், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
மதுரை பெரியார், அனுப்பானடி, மீனாட்சி அம்மன் கோவில் நிலைய தீயணைப்பு அலுவலர் கள் வெங்கடேசன், உதயகுமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக் கும் பணியில் ஈடுபட்டனர்.
பெரியார் தீயணைப்பு நிலைய வீரர்கள் செக்கானூரணியை சேர்ந்த சிவராஜன் (33), பைக் காரா பகுதியை சேர்ந்த கல்யாணகுமார் (37), மீனாட்சி அம்மன் கோவில் தீயணைப்பு நிலைய வீரர் கிருஷ்ணமூர்த்தி(30), அனுப்பானடி தீயணைப்பு நிலைய வீரர் சின்னகருப்பு ஆகியோர் முன்னின்று தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அவர்கள் அந்த பழமையான கட்டிடத்தின் உள்பகுதிக்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த கட்டிடத்தின் மேல் தளம் இடிந்து விழுந்தது. இதில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட அந்த 4 தீயணைப்பு வீரர்களும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். குறிப்பாக, சிவராஜனுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டதுடன் இடிபாடுகளில் சிக்கியதில் கால், கைகளில் அடிபட்டு அந்த இடத்திலேயே மயங்கி விட்டார். இதுபோல், கிருஷ்ணமூர்த்தியின் காலில் துணிகளை அடுக்கி வைக்க பயன்படும் இரும்பு ரேக் விழுந்ததில், அவரால் அங்கிருந்து வெளியே வரமுடியவில்லை. இதனை தொடர்ந்து அவர், தான் உள்ளே சிக்கி கொண்டதை செல்போன் மூலம் சக வீரர்களிடம் தெரியப்படுத்தினார்.
இவர்களுடன், மீட்பு பணியில் ஈடுபட்ட கல்யாணகுமார், சின்னகருப்பு ஆகியோரை சக வீரர்கள் படுகாயத்துடன் மீட்டு, ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பழமையான கட்டிடம் என்பதால், உள்ளே சிக்கி கொண்டவர்களை மீட்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டது. பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி கிடந்த சிவராஜனும், கிருஷ்ணமூர்த்தியும் பிணமாக மீட்கப்பட்டனர். இதனை தொடர்ந்து அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப் பட்டது. இதுபோல், காயம்பட்ட வீரர்களும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பலியான தீயணைப்பு வீரர்களின் உடல்களை பார்த்து அவர் களது குடும்பத்தினர் கதறி அழுதது மிகவும் பரிதாபமாக இருந்தது.
தீயணைப்பு துறை இயக்குனர் ஜாபர்சேட், தென்மண்டல இணை இயக்குனர் சரவணகுமார், மாவட்ட அலுவலர் கல்யாண்குமார் மற்றும் நிலைய அலுவலர்கள், சக தீயணைப்பு வீரர்கள், கலெக்டர் அன்பழகன், போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, பெரிய ஆஸ்பத்திரி டீன் சங்குமணி உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதனைதொடர்ந்து அவர்களது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அரசு மரியாதையுடன் சொந்த ஊர்களில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறை இயக்குனர் ஜாபர்சேட் கூறுகையில், “பழமையான கட்டிடங்கள் உறுதி தன்மையுடனும், பாதுகாப்பு அம்சங்களுடனும் உள்ளதா? தீயணைப்பு கருவிகள் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும்” என்றார்.
இது குறித்து தெற்குவாசல் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் பழமையான கட்டிடம் என்பதால் மழைக்கு சேதம் அடைந்திருந்த நிலையில் தீ விபத்தில் இடிந்து விழுந்ததும் தெரியவருகிறது. தீபாவளி தினத்தில் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு 2 வீரர்கள் வீரமரணம் அடைந்த சம்பவம் மதுரையில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.