கூடலூரில் 30 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து வீடு சேதம் டிரைவர் படுகாயம்

கூடலூரில் 30 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து தொழிலாளி வீடு சேதம் அடைந்தது. படுகாயம் அடைந்த டிரைவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

Update: 2020-11-16 04:01 GMT
கூடலூர்,

கூடலூர் ஆனைசெத்தகொல்லி பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 43). நேற்று முன்தினம் காரில் கூடலூர் சென்றார். அப்போது கூடலூரில் இருந்து சுல்தான் பத்தேரி செல்லும் சாலையில் உள்ள சிவசண்முக நகர் பகுதியில் காரை நிறுத்தினார். சிறிது நேரம் கழித்து காரை ஓட்டினார்.

அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்தது. தொடர்ந்து சாலையோரம் இடதுபுறத்தில் சுமார் 30 அடி பள்ளத்தில் பலமுறை உருண்டு கவிழ்ந்தது. அப்போது அந்த கார் பள்ளத்தில் இருந்த துரைசாமி என்பவர் வீட்டின் மீது விழுந்தது.

இதில் வீட்டின் முன்பக்கம் பலத்த சேதமடைந்தது. இந்த சமயத்தில் துரைசாமி குடும்பத்தினர் வீட்டின் பின்பக்க வளாகத்தில் நின்றிருந்ததால் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இதனிடையே சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து படுகாயத்துடன் காருக்குள் சிக்கி இருந்த ராஜாவை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கூடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்