கவர்னரின் நடவடிக்கையால் புதுவையின் மரியாதை கெட்டுவிட்டது அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் குற்றச்சாட்டு
கவர்னரின் நடவடிக்கையால் புதுவையின் மரியாதை கெட்டுவிட்டது என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரி,
புதுவை துத்திப்பட்டில் அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகவும், இதில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்தும் மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணைய விசாரணைக்கு கவர்னர் கிரண்பெடி பரிந்துரை செய்துள்ளார்.
இந்த கிரிக்கெட் மைதானத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசின் மீது கோபம்
துத்திப்பட்டில் உள்ள மைதானம் சர்வதேச தரத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மைதானத்தை அரசு சார்பில் அமைக்க முடியாத நிலைதான் உள்ளது. இந்த மைதானத்தில் ரஞ்சி போட்டி நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் பல போட்டிகளை இந்த மைதானத்தில் நடத்த முடியும்.
கவர்னர் கிரண்பெடி அரசு மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக கிரிக்கெட் மைதான விஷயத்தில் தலையிடுகிறார். அவருக்கு அரசின் மீது கோபம் இருந்தால் அதை அரசிடம்தான் காட்ட வேண்டும்.
ஆதரவு
புதுவை பஸ்நிலையம் கூட குளம் இருந்த பகுதியில்தான் அமைக்கப்பட்டுள்ளது. அதற்காக அதை இப்போது இடிக்க முடியுமா? அரசு நிலத்தை ஆக்கிரமித்து இருந்தால் அதுதொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கும். ஆனால் கவர்னர் கிரண்பெடி வழக்குப்போடு, கைது செய் என்று உத்தரவிடுகிறார்.
அவரது நடவடிக்கைகளின் மூலம் புதுவையின் மரியாதை இந்திய அளவில் கெட்டுவிட்டது. இதேபோல் கோடிக் கணக்கில் புதுவைக்கு யார் செலவு செய்வார்கள்? ஒரு விளையாட்டு வீரனாக இந்த மைதான நிர்வாகத்துக்கு நான் ஆதரவு தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.