பெங்களூரு அருகே போலி ஆவணங்கள் தயாரித்து வீட்டுமனை விற்ற 3 பேர் கைது
பெங்களூரு அருகே போலி ஆவணங்கள் தயாரித்து வீட்டுமனை விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டார்கள். மேலும் அவர்கள் 138 ஏக்கர் நிலத்தை விற்க திட்டமிட்டதும் அம்பலமாகி உள்ளது.
பெங்களூரு,
பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புராவை சேர்ந்தவருக்கு சொந்தமான வீட்டுமனையை மர்மநபர்கள் சிலர் போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்திருந்தனர். இதுதொடர்பாக வீட்டுமனை உரிமையாளர் தொட்டபள்ளாப்புரா போலீஸ் நிலையத்திலும், சார் பதிவாளர் அலுவலகத்திலும் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், தொட்டபள்ளாப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்தார்கள்.
இந்த நிலையில், போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் வீட்டுமனையை விற்பனை செய்ததாக 3 பேரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் தொட்டபள்ளாப்புராவை சேர்ந்த பசவராஜ், உமேஷ், பிரசன்னகுமார் என்று தெரியவந்தது. இவர்கள் 3 பேரும் போலி ஆவணங்கள் தயாரித்து நிலங்கள் மற்றும் வீட்டுமனைகளை விற்பனை செய்வதை தொழிலாக வைத்திருந்தது தெரியவந்தது.
138 ஏக்கர் நிலத்தை...
அவர்களது வீடுகளில் சோதனை நடத்திய போது ஏராளமான நிலங்களின் போலி ஆவணங்கள் சிக்கியது. அதாவது பெங்களூரு புறநகரில் உள்ள தொட்டபள்ளாப்புரா, தேவனஹள்ளி, சிக்கஜாலா, எலகங்கா, கெங்கேரி பகுதிகளில் இருக்கும் நிலங்கள் மற்றும் வீட்டுமனைகளுக்கு போலி ஆவணங்களை 3 பேரும் தயாரித்து வைத்திருந்தனர். ஒட்டு மொத்தமாக 138 ஏக்கர் நிலத்திற்கு போலி ஆவணங்கள் தயாரித்து வைத்திருந்ததுடன், அந்த நிலத்தை விற்பனை செய்யவும் 3 பேரும் திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, 138 ஏக்கருக்கான போலி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 பேர் மீதும் தொட்டபள்ளாப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.