காரில் கடத்தப்பட்ட 3 ஆயிரம் லிட்டர் சாராயம் பறிமுதல் - 2 பேர் கைது
பேரளம் அருகே காரில் கடத்தப்பட்ட 3 ஆயிரம் லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
நன்னிலம்,
திருவாரூர் மாவட்டம் திருக்கொட்டாரம் ஆர்ச் அருகே பேரளம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை போலீசார் மறித்தனர். அப்போது கார் நிற்காமல் சென்றது. இதனால் போலீசார் காரை விரட்டி சென்று கிளியனூர் பஸ் நிறுத்தம் அருகே வழிமறித்து பிடித்து சோதனை நடத்தினர். சோதனையில் காரில் 3ஆயிரம் லிட்டர் சாராய பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் காரை ஓட்டி வந்த குடவாசல் பகுதியை சேர்ந்த சரவணனை(வயது52) கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து சாராயத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சாக்கோட்டை பகுதியை சேர்ந்த கார் உரிமையாளர் வெங்கடேஸ்வரனை(38) கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கார், சாராயத்தின் மதிப்பு ரூ.7 லட்சம் என கூறப்படுகிறது.