கல்வராயன்மலையில், மனைவி கண் எதிரே வாலிபர் தீக்குளித்து தற்கொலை

கல்வராயன்மலையில் மனைவி கண் எதிரே வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-11-15 06:43 GMT
கச்சிராயபாளையம்,

கல்வராயன்மலை வஞ்சிக்குழி கிராமத்தை சேர்ந்தவர் தீர்த்தன் மகன் சக்திவேல்(வயது 32). இவருக்கும், மான்கொம்பு கிராமத்தை சேர்ந்த லட்சுமிக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு சிரஞ்சீவி, சஞ்சீவி, கோகுல் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபித்துக்கொண்ட லட்சுமி, தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு மான்கொம்பு கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் சக்திவேல் பெட்ரோல் கேனுடன் நேற்று முன்தினம் மதியம் மான்கொம்பு கிராமத்துக்கு சென்று லட்சுமியை தன்னுடன் வாழ வருமாறு அழைத்தார். ஆனால் அவர் மறுத்து விட்டார். இதனால் மனமுடைந்த சக்திவேல், தான் வைத்திருந்த பெட்ரோல் கேனை திறந்து பெட்ரோலை தன் மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் அவரது உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. வலி தாங்க முடியாமல் அவர் அலறினார்.

இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் ஓடோடி வந்து சக்திவேலின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி சக்திவேல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேர்ந்து வாழ மறுத்த மனைவியின் கண் எதிரே வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கல்வராயன்மலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்