திருமணத்திற்காக ஒருவரை மதம் மாற வலியுறுத்துவது தவறு கர்நாடகத்தில் ‘லவ் ஜிகாத்’-க்கு எதிராக விரைவில் சட்டம் கொண்டுவரப்படும் - மத்திய மந்திரி சதானந்தகவுடா பேட்டி

கர்நாடகத்தில் லவ் ஜிகாத்துக்கு எதிராக விரைவில் சட்டம் கொண்டுவரப்படும் என்றும், திருமணத்திற்காக ஒருவரை மதம் மாற வலியுறுத்துவது தவறு என்றும் மத்திய மந்திரி சதானந்தகவுடா கூறினார்.

Update: 2020-11-14 22:00 GMT
பெங்களூரு,

குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா குஷால்நகரில் மத்திய ரசாயன துறை மந்திரி சதானந்தகவுடாவின் மகனான கார்கின் மாமனார் வீடு அமைந்துள்ளது. நேற்று முன்தினம் அங்கு வைத்து சதானந்தகவுடாவின் பேரக்குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடந்தது. இதில் சதானந்தகவுடா, அவரது மனைவி, மகன் கார்க் மற்றும் அவரது மனைவி, மாமனார் நாணய்யா உள்பட வெகு சிலரே கலந்து கொண்டனர்.

கொரோனா பரவல் காரணமாக குழந்தையின் பெயர் சூட்டு விழா வெகு எளிமையாக கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. விழா முடிந்த பின்னர் மத்திய மந்திரி சதானந்தகவுடா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் முதல்-மந்திரியை மாற்றும் திட்டம் தற்போது இல்லை. இந்த ஆட்சி முடியும் வரை முதல்-மந்திரியாக எடியூரப்பாவே நீடிப்பார். இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். எனக்கு சித்தராமையாவை பார்க்கும்போது அய்யோ பாவம் என்று தோன்றுகிறது. காங்கிரஸ் கட்சியில் அவருக்கான இடம் கேள்விக்குறியாகி வருகிறது. அவர் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்காகத்தான் பா.ஜனதா மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

இன்னும் சில நாட்களில் சித்தராமையா முழுவதுமாக மனநிலை பாதிக்கப்பட்டவர்போல் ஆகி விடுவார். திருமணத்திற்காக மதம் மாறுவது(லவ் ஜிகாத்) என்பது தவறு. திருமணத்திற்காக மதம் மாறுவதை தடுக்க சட்டம் கொண்டுவரப்படும். தற்போது ‘லவ் ஜிகாத்‘ என்பது அதிகரித்து வருகிறது. அலகாபாத் கோர்ட்டு, லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் கொண்டுவந்துள்ளது.

கர்நாடகத்தில் லவ் ஜிகாத்துக்கு எதிராக விரைவில் சட்டம் கொண்டுவரப்படும். இதுதொடர்பாக கட்சியின் உயர்மட்டக்குழுவினர் கூடி விரைவில் முடிவு எடுப்பார்கள். திருமணத்திற்காக ஒருவரை மதம் மாற வலியுறுத்துவது தவறு. இதனால் சமூக ஆரோக்கியம் கெட்டுப்போகிறது. அதன்காரணமாக லவ் ஜிகாத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்