கர்நாடகத்தில் டிசம்பர் 1-ந் தேதி மருத்துவ கல்லூரிகள் திறப்பு - சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் அறிவிப்பு

கர்நாடகத்தில் டிசம்பர் 1-ந் தேதி மருத்துவ கல்லூரிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் அறிவித்துள்ளார்.

Update: 2020-11-14 22:00 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கும் நடப்பு கல்வி ஆண்டு இன்னும் தொடங்கப்படவில்லை. மாநிலத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவுவது வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிலையில் டிகிரி கல்லூரிகள் வருகிற 17-ந் தேதி திறக்கப்படும் என்று உயர்கல்வித்துறையை நிர்வகிக்கும் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் ஏற்கனவே அறிவித்துள்ளார். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. திட்டமிட்டப்படி வருகிற 17-ந் தேதி டிகிரி கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது.

அதே போல் பள்ளிகளை திறப்பது குறித்தும் அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. டிசம்பர் மாதத்தில் 9-ம் வகுப்பு முதல் பி.யூ.கல்லூரி வரை வகுப்புகளை தொடங்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கர்நாடகத்தில் வருகிற டிசம்பர் 1-ந் தேதி மருத்துவ கல்லூரிகள் திறக்கப்படும் என்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் ராஜீவ்காந்தி மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள மருத்துவ கல்லூரிகளை வருகிற டிசம்பர் மாதம் 1-ந் தேதி திறக்க முடிவு செய்துள்ளோம். அத்துடன் பல் மருத்துவம், ஆயுஸ், துணை மருத்துவ படிப்புகள், நர்சிங் கல்லூரி, மருந்தாளுநர் கல்லூரிகளும் திறக்கப்படும். கல்லூரி நிர்வாகங்கள் மற்றும் மாணவர்கள், அரசு வெளியிட்டுள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு சுதாகர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்