திருக்கோவிலூர் அருகே பயங்கரம்: மளிகை வியாபாரி சுட்டுக்கொலை - விவசாயி கைது
திருக்கோவிலூர் அருகே மளிகை வியாபாரியை சுட்டுக்கொலை செய்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
திருக்கோவிலூர்,
குடும்ப பிரச்சினையால் சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக மளிகை வியாபாரி நேற்று சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள சிறுபனையூர் தக்கா கிராமம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் பாஷா மகன் ஷான் (வயது 42). இவர் அருகே உள்ள கூவனூர் கிராமத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். ஷான் நேற்று பகல் 1 மணியளவில் கடையை பூட்டி விட்டு தொழுகைக்காக வீட்டின் அருகே உள்ள பள்ளிவாசலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதே தெருவில் வசித்து வந்த விவசாயியான ஹாரூன்(40), தன்னிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கியால் திடீரென ஷானை சுட்டார். துப்பாக்கியில் இருந்து சீறிப்பாய்ந்த குண்டு, அவரது மார்பை துளைத்தது. இதில் படுகாயம் அடைந்த ஷான், ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்து விழுந்தார். இதற்கிடையில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் பதற்றத்துடன் ஓடி வந்தனர்.
அப்போது ஷான் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி துடித்துக்கொண்டிருந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஷான் பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர், திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜி, இன்ஸ்பெக்டர் செல்வம், திருப்பாலபந்தல் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. ஷானுக்கும், ஹாரூனுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. ஹாரூனின் தந்தை சையத் அனுஷ் உரிமம் பெற்று நாட்டுத்துப்பாக்கி வைத்துள்ளார். அவர் அவ்வப்போது காட்டுப்பகுதிக்கு சென்று பறவை மற்றும் விலங்குகளை வேட்டையாடி வருவார். அதன்படி நேற்று வேட்டைக்கு செல்வதற்காக சையத் அனுஷ் துப்பாக்கியில் குண்டுகளை நிரப்பி வைத்து இருந்தார்.
இந்த நிலையில் ஷான் பள்ளிவாசலில் தொழுகைக்கு செல்வதற்காக அந்த வழியாக நடந்து வந்துகொண்டிருந்தார். அவரை பார்த்ததும் முன்விரோதம் காரணமாக ஆத்திரமடைந்த ஹாரூன் தனது தந்தையின் நாட்டுத்துப்பாக்கியை எடுத்து ஷானை சுட்டது தெரியவந்தது.
இதையடுத்து ஹாரூனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஷான் கொலை செய்யப்பட்டதற்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான ஷானுக்கு சாகர்(35) என்ற மனைவியும், தாஜி(19), தீனா(17) என்ற 2 மகள்களும், அனுஷ்(12) என்ற மகனும் உள்ளனர். முன்விரோதம் காரணமாக மளிகை வியாபாரி, துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருக்கோவிலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.