தூத்துக்குடி-தென்காசியிலும் வெளுத்து வாங்கியது: நெல்லையில் கொட்டித்தீர்த்த கனமழை
நெல்லையில் கனமழை கொட்டித்தீர்த்தது. தூத்துக்குடி, தென்காசியிலும் மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
தென்காசி,
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை சந்திப்பு, டவுன், பாளையங்கோட்டை பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் நெல்லை சந்திப்பு மேம்பாலத்தின் கீழ் பகுதியிலும், மேலப்பாளையம் பகுதியிலும் மழைநீர் குளம்போல் தேங்கியது. மேலப்பாளையம் மாட்டுச்சந்தை சேறும், சகதியுமாக காட்சி அளித்தது. நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்திலும், வ.உ.சி. மைதானத்திலும் மழைநீர் குளம் போல் தேங்கியது. நெல்லை மாவட்டத்தில் நேற்றும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
நெல்லை குலவணிகர்புரம், பாளையங்கோட்டை சமாதானபுரம் பகுதியில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நெல்லை மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலைகள் அமைக்கும் பணி, குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெறுவதால், சாலைகள் குண்டும் குழியுமாக மோசமாக கிடக்கிறது. இந்த மழையினால் அந்த சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு மோசமாக உள்ளது.
சேறும் சகதியுமான சாலை
நெல்லை டவுன் வழுக்கோடையில் இருந்து தொண்டர் சன்னதி கோவில் வரையிலும் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டாலும், சாலைகள் சீரமைக்கப்படாததால் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அங்கு சேறும் சகதியுமாக உள்ளதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
மாவட்டத்தில் பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், மூலைக் கரைப்பட்டி, நாங்குநேரி, திருக்குறுங்குடி, களக்காடு, மூன்றடைப்பு பகுதியில் நேற்று மதியம் நல்ல மழை பெய்தது.
அணைகள்
இதேபோல் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மதியம் பாபநாசம் அணைப்பகுதியில் ½ மணி நேரம் பலத்த மழை பெய்தது.
தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, கடையம் உள்ளிட்ட பகுதியில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பெய்த மழையால் அந்த பகுதிகளில் உள்ள ஓடைகளிலும், கால்வாய்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 97.60 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 635 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு 1,405 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு
சேர்வலாறு அணை நீர்மட்டம் 89.63 அடியாகவும், அடவிநயினார் அணை 97 அடியாகவும், மணிமுத்தாறு அணை 77.50 அடியாகவும், கடனாநதி அணை 65.80 அடியாகவும், ராமநதி அணை 63.25 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை 10.25 அடியாகவும், குண்டாறு அணை 36.10 அடியாகவும், நம்பியாறு அணை 8.46 அடியாகவும், கொடுமுடியாறு அணை 34 அடியாகவும், கருப்பாநதி அணை 58.10 அடியாகவும் உள்ளது.
மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. எனினும் கொரோனா ஊரடங்கு காரணமாக அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால் அருவிக்கரை வெறிச்சோடி காணப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய பலத்த மழை வெளுத்து வாங்கியது. இந்த மழை நேற்று மதியம் வரை தொடர்ந்து பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கி கிடந்தது.
இந்த மழையால் தூத்துக்குடி கிரேட்காட்டன் ரோடு, காசுக்கடை பஜார், சிவந்தாகுளம் ரோடு, திருச்செந்தூர் ரோடு, வ.உ.சி. கல்லூரி அருகே உள்ள தற்காலிக மார்க்கெட், திருச்செந்தூர் ரோடு மற்றும் சாலைப்பணிகளுக்காக தோண்டப்பட்ட பகுதிகள் அனைத்தும் மழைநீர் சூழ்ந்து நின்றது.
தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள உப்பளங்கள் முழுவதும் மழைநீரில் மூழ்கியது. சில இடங்களில் காற்று காரணமாக மரங்கள் சேதம் அடைந்தன. திருச்செந்தூர்-பாளையங்கோட்டை ரோட்டில் குருகாட்டூர் அருகே பெரிய மரம் ஒன்று வேரோடு சரிந்து ரோட்டின் குறுக்கே விழுந்தது. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மழை அளவு
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
பாபநாசம்-42, பாளையங்கோட்டை-63, சேர்வலாறு-34, மணிமுத்தாறு-25, நம்பியாறு-7, கொடுமுடியாறு-15, அம்பை-29, சேரன்மாதேவி-26, நாங்குநேரி-19.5, களக்காடு-55.4, மூலைக்கரைப்பட்டி-40, நெல்லை-11, ராதாபுரம்-6.2, ராமநதி-2, குண்டாறு-5, செங்கோட்டை-2, கருப்பாநதி-2, கடனாநதி-2.
ஸ்ரீவைகுண்டம்-57, திருச்செந்தூர்-18, காயல்பட்டினம்-11, குலசேகரன்பட்டினம்- 4, கயத்தாறு-9, கடம்பூர்-9, மணியாச்சி-18, கீழஅரசடி-0.5, சாத்தான்குளம்-5.2, தூத்துக்குடி-21.