மகளிர் காங்கிரஸ் சார்பில் வெங்காயம், உருளைக்கிழங்கு மாலை அணிந்து நூதன ஆர்ப்பாட்டம்
மகளிர் காங்கிரஸ் சார்பில் வெங்காயம், உருளைக்கிழங்கு மாலை அணிந்து நூதன ஆர்ப்பாட்டம்.
புதுச்சேரி,
வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக் கோரியும், மத்திய அரசை கண்டித்தும், புதுவை மாநில மகளிர் காங்கிரஸ் சார்பில் கவர்னருக்கு வெங்காயம், உருளைக்கிழங்கு பரிசாக வழங்க முடிவு செய்தனர். இதற்காக நேற்று மாலை தலைமை தபால் நிலையம் முன்பு மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஒன்று கூடினர். அப்போது வெங்காயம், உருளைக்கிழங்கை மாலையாக கோர்த்து அவர்கள் கழுத்தில் அணிந்து இருந்தனர். பின்னர் அங்கிருந்து கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலமாக புறப்பட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனை தொடர்ந்து அதே இடத்தில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில மகளிர் காங்கிரஸ் தலைவர் பஞ்சகாந்தி தலைமை தாங்கினார். துணைத் தலைவி விஜயகுமாரி, ஜெயலட்சுமி, அம்சா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.