திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் நாளை தொடங்குகிறது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

Update: 2020-11-13 18:40 GMT
திருச்செந்தூர், 

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.

அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்படுகிறார். காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது. 2-ம் திருநாள் முதல் 5-ம் திருநாள் வரையிலும் தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடைபெறும்.

சுவாமி சப்பரத்தில் எழுந்தருளல்

1-ம் திருநாள் முதல் 5-ம் திருநாள் வரையிலும் யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயநாதருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து மதியம் 12 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கரமாகி தீபாராதனை நடைபெறுகிறது. மாலையில் தங்கத்தேரில் சுவாமி கிரிப்பிரகாரத்தில் வீதி உலா செல்வதற்கு பதிலாக, சுவாமி-அம்பாள்களுடன் சப்பரத்தில் எழுந்தருளி, உள்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

20-ந்தேதி, சூரசம்ஹாரம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் திருநாளான வருகிற 20-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடைபெறும். காலையில் யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம் அலங்காரமாகிய பின்னர், சுவாமி வள்ளி-தெய்வானையுடன் உள்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடக்கிறது.

பின்னர் மதியம் 1.30 மணிக்கு சுவாமி, அம்பாள்களுக்கு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. தொடர்ந்து சுவாமி, வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமி-அம்பாள்களுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. பின்னர் கடற்கரைக்கு பதிலாக, கோவில் கிரிபிரகாரத்தில் கிழக்கு பகுதியில் சூரபத்மனை சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது.

7-ம் திருநாளான 21-ந்தேதி (சனிக்கிழமை) இரவில் சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, 6, 7-ம் திருநாள்களில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மற்ற விழா நாட்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுடன் தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். கோவில் வளாகம், மண்டபம், விடுதிகளில் தங்குவதற்கும், விரதம் இருப்பதற்கும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. சாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் காத்திருப்பதற்காக தற்காலிக கொட்டகைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

விழா நிகழ்ச்சிகள் அனைத்தும்https://www.youtu-be.com/channel/UCDiavBtRKei0x1fYVupEw/live என்ற இணையதளத்தில் நேரலையாக காணலாம். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்