கூடலூர் அருகே ஊருக்குள் நுழையும் காட்டுயானைகள் கணக்கெடுப்பு - வனத்துறை ஊழியர்களுக்கு செயல் விளக்கம்
கூடலூர் அருகே ஊருக்குள் நுழையும் காட்டுயானைகளை கணக்கெடுக்க வனத்துறை ஊழியர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
கூடலூர்,
கூடலூர் வனக்கோட்டத்தில் கூடலூர், ஓவேலி, நாடுகாணி தாவரவியல் மையம், தேவாலா, சேரம்பாடி, பிதிர்காடு உள்ளிட்ட வனச்சரகங்கள் உள்ளன. இங்கு காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் எல்லையோர வனத்தில் கூடலூர் வனக்கோட்டம் உள்ளதால் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவு காணப்படுகிறது.
குறிப்பாக ஒவ்வொரு காலநிலைகளுக்கு ஏற்ப காட்டுயானைகள் உணவு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இடம் பெயர்ந்து செல்கிறது. அப்போது ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தி வருகிறது. மேலும் மனித-காட்டுயானை மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. கூடலூர் வனக்கோட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை 8 பேர் காட்டுயானை தாக்கி உயிரிழந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து மனித-காட்டுயானை மோதலை தடுப்பதற்கான ஆய்வுக்கூட்டம், நாடுகாணி தாவரவியல் பூங்கா வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது. கூடலூர் கோட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன் தலைமை தாங்கினார். வனச்சரகர்கள் ராமகிருஷ்ணன், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வனவர்கள் மற்றும் வனக்காப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கூடலூர் வனக்கோட்ட அலுவலர் சுமேஷ் சோமன் பேசியபோது கூறியதாவது:-
கூடலூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் எவ்வளவு காட்டுயானைகள் உள்ளது என கணக்கெடுக்க வேண்டும். பின்னர் வெளியிடங்களில் இருந்து எத்தனை யானைகள் வருகிறது என வன ஊழியர்கள் விவரங்களை சேகரிக்க வேண்டும். கேரளாவில் இருந்து வரும் யானைகளை அடையாளம் காண வேண்டும். இதேபோல் பலாப்பழம் உள்ளிட்ட சீசன் காலங்களில் ஊருக்குள் வரும் யானைகளை கண்டறிய வேண்டும்.
இவ்வாறு வன ஊழியர்கள் விவரங்களை சேகரித்த பின்னர் காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. இதற்காக வருகிற 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. வன ஊழியர்களுக்கு கேமரா உள்பட பல்வேறு சாதனங்கள் வழங்கப்படும். காட்டு யானைகளை அடையாளம் கண்டு புகைப்படம் எடுத்தல் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்க வேண்டும்.
தொடர்ந்து 21-ந் தேதி களப்பணியில் சேகரிக்கப்பட்ட விவரங்கள் கணினியில் பதிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் வன ஊழியர்களுக்கு செயல்முறை விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.