ஐகோர்ட்டு அறிவுறுத்தியும் அரசு அலுவலர்கள் தீபாவளி வசூலை தவிர்க்காத நிலை - லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணிக்காதது ஏன்?
ஐகோர்ட்டு அறிவுறுத்தியும் பல்வேறு அரசுத்துறையை சார்ந்தவர்கள் தீபாவளி வசூலை தவிர்க்காத நிலை இருந்தும், லஞ்ச ஒழிப்பு போலீசார் இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
விருதுநகர்,
ஆண்டு தோறும் தீபாவளியையொட்டி குறிப்பிட்ட அரசுத்துறையை சேர்ந்த ஊழியர்கள் துறைக்கு தொடர்புள்ளவர்களிடம் இருந்து தீபாவளி இனாம் வசூல் செய்வது வாடிக்கையாகிவிட்டது. இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டு தீபாவளி வசூல் தவிர்க்கப்பட வேண்டும் என சமீபத்தில் அறிவுறுத்தி உள்ளது. போலீஸ் துறை தலைவரும், போலீசாரும் தீபாவளி இனாம் வசூலில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்துவது வழக்கம்தான்.
ஆனாலும் தீபாவளியையொட்டி பல துறைகளில் அரசு ஊழியர்கள் துறைச்சார்ந்த தொடர்புள்ளவர்களிடம் இருந்து தீபாவளி இனாம் வசூல் செய்வது தொடர்கிறது.
விருதுநகர் பகுதியில் பஞ்சாயத்து தலைவரிடம், ஊரக வளர்ச்சித்துறையை சேர்ந்த ஊழியர்கள் தீபாவளி இனாம் தரும்படி நிர்பந்தம் செய்ததாக புகார் கூறப்படுகிறது. பஞ்சாயத்தின் வருமானத்தின் அடிப்படையில் இனாம் தர வேண்டும் என்று தலைவர்களிடம் வற்புறுத்து வதாகவும் கூறப்படுகிறது.
லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை போலீசார் புகார்களின் அடிப்படையில் மட்டும் அல்லாமல் கண்காணிப்பு அடிப்படையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றங்கள் அறிவுறுத்தி உள்ளன. ஆனாலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீபாவளி இனாம் வசூல் நடைமுறையை தவிர்ப்பதற்கு முறையாக கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளாதது ஏன்? என்று தெரியவில்லை.
எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி தீபாவளி இனாம் வசூலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், துறை சார்ந்த முறைகேடுகளை தவிர்க்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.