பெரம்பலூர் மாவட்டத்தில், மக்காச்சோள பயிருக்கு காப்பீடு செய்வதற்கு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோள பயிருக்கு காப்பீடு செய்ய கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் பெரும்பாலானோர் மானாவாரி நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். குறிப்பாக பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிக அளவு மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். தற்போது பிரதம மந்திரியின் சிறப்பு பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் நெல், மக்காச்சோளம் போன்ற பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மக்காச்சோளத்துக்கு வருகிற 15-ந் தேதி வரையும், நெல் பயிருக்கு வருகிற 30-ந் தேதி வரையும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்காச்சோளத்துக்கு பயிர் காப்பீடு செய்ய 15-ந் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நாளை(சனிக்கிழமை) தீபாவளி மற்றும் 15-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் 2 நாட்களும் விடுமுறை நாட்களாகும். இதனால் பெரும்பாலான விவசாயிகள் தற்போது மக்காச்சோள பயிருக்கு பயிர் காப்பீடு செய்வதற்காக இ-சேவை மையம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் குவிந்தவண்ணம் உள்ளனர்.
கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசத்தில் கடைசி இரண்டு நாட்கள் விடுமுறை தினமாக உள்ளதால் மாவட்ட நிர்வாகம் மக்காச்சோள பயிருக்கு காப்பீடு செய்ய கூடுதல் கால அவகாசம் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.