தீபாவளி கொண்டாட சொந்த ஊர் செல்ல கோயம்பேட்டில் இருந்து 2-வது நாளாக சிறப்பு பஸ்கள் இயக்கம்

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வதற்கு கோயம்பேட்டில் இருந்து 2-வது நாளாக சிறப்பு பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன. கடந்த 2 நாட்களில் 2 லட்சம் பேர் வரை பயணம் செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Update: 2020-11-12 23:07 GMT
சென்னை, 

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழக அரசு இந்த ஆண்டு 14 ஆயிரத்து 757 சிறப்பு பஸ்களை இயக்குகிறது. அதன்படி முதல் நாளான நேற்று முன்தினம் மட்டும் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன், சிறப்பு பஸ்களையும் சேர்த்து தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 125 பஸ்கள் இயக்கப்பட்டன.

அதன்படி, சென்னையில் மட்டும் 2 ஆயிரத்து 225 பஸ்கள் இயக்கப்பட்டதாகவும், அதில் சுமார் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயணித்ததாகவும் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதன் தொடர்ச்சியாக நேற்று 2-வது நாளாகவும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 512 பஸ்களும், சென்னையில் இருந்து மட்டும் 3 ஆயிரத்து 705 பஸ்களும் இயக்கப்பட்டன. சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும்விதமாக கோயம்பேடு பஸ் நிலையம், மாதவரம் பஸ் நிலையம், தாம்பரம் பஸ் நிலையம், கே.கே.நகர் பஸ்நிலையம் உள்பட 5 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் புறப்பட்டு செல்கின்றன.

2 லட்சம் பேர் பயணம்

சென்னை மாநகரில் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் புறப்படும் இடங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக கூடுதலாக மாநகர பஸ்களும், போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் சென்னையில் இருந்து நேற்று புறப்பட்ட பஸ்களிலும் மக்கள் கூட்டம் கடந்த ஆண்டைவிட சற்று குறைவாகவே இருந்தது. நேற்று மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்ததாகவும், கடந்த 2 நாட்களையும் சேர்த்து சுமார் 1 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேபோல் ஆம்னி பஸ்களிலும் பலர் பயணித்தனர். சென்னையில் நேற்று மழை விட்டுவிட்டு பெய்ததால் பயணிகள் பலர் மழையில் நனைந்தபடி பஸ்களில் ஏறி புறப்பட்டு சென்றனர்.

சில பஸ்களில் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் இருக்கைகள் குறியிடப்பட்டு இருந்ததையும் பார்க்க முடிந்தது. இந்த நிலையில் தீபாவளி தினத்தன்று (நாளை) சொந்த ஊர்களில் இருக்கும் வகையில் 3-வது நாளாக இன்றும் (வெள்ளிக்கிழமை) சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் 6 ஆயிரத்து 120 பஸ்களும், சென்னையில் இருந்து மட்டும் 3 ஆயிரத்து 580 பஸ்களும் இயக்கப்பட இருக்கின்றன.

மீண்டும் திரும்புவதற்கு பஸ்கள்

என்னதான் போக்குவரத்து நெரிசலை குறைக்க சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது 5 இடங்களில் ஒதுக்கப்பட்டாலும், குறிப்பிட்ட சில இடங்களில் மழை காரணமாகவும், சிறப்பு பஸ்கள் ஒன்றன்பின் ஒன்றாக இயக்கப்பட்டதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கமுடியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு எப்படி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதோ? அதேபோல், சொந்த ஊர்களில் இருந்து மீண்டும் திரும்புவதற்கு ஏதுவாகவும் சிறப்பு பஸ்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. அதன்படி, தமிழகம் முழுவதும் சுமார் 18 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்