அரசு நிர்ணயித்த நேரத்தில் பட்டாசுகள் வெடித்து சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் தீபாவளியை கொண்டாட வேண்டும் - கலெக்டர் சி.கதிரவன் வேண்டுகோள்

அரசு நிர்ணயித்த நேரத்தில் பட்டாசுகளை வெடித்தும், சுற்றுச்சூழல் பாதிக்காத வகையிலும் தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று கலெக்டர் சி.கதிரவன் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

Update: 2020-11-12 14:34 GMT
ஈரோடு, 

ஈரோடு மாவட்ட கலெக்டரின் மனுநீதி திட்ட முகாம் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வள்ளிபுரத்தான் பாளையத்தில் நேற்று மனுநீதி திட்ட முகாம் நடந்தது. ஈரோடு மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க. மாநகர் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் முன்னிலையில் நடந்த இந்த முகாமில் ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றுக்கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் அதிக அளவில் மக்கள் நல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். இதனால் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க அரசு அலுவலகங்களை தேடிச்சென்ற நிலை மாறி, மக்களை தேடி அதிகாரிகள் வந்து குறைகளை கேட்கும் வகையில் மனுநீதி திட்ட முகாம் ஈரோடு மாவட்டத்தில் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 7.5 உள் ஒதுக்கீடு பெறப்பட்டதன் மூலம் கிராமப்புறத்தில் இருந்து அரசு பள்ளிக்கூடங்களில் படித்த மாணவ-மாணவிகள் மருத்துவ படிப்புக்கு செல்லும் நிலையை தமிழக முதல்-அமைச்சர் உருவாக்கி உள்ளார். இதுபோல் மாவட்டம் தோறும் மருத்துவக்கல்லூரி என்ற நிலையும் உருவாக்கப்பட்டு உள்ளது. தமிழக மாணவர்கள் நீட் தேர்வு உள்ளிட்ட போட்டித்தேர்வுகளை அச்சமின்றி எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. நீட் தேர்வுக்காக தமிழக அரசு மூலம் இலவச பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அனைத்து துறைகள் மூலமாகவும் பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்கள் தினந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அனைத்து தரப்பினரும் பயன்பெற்று வருகிறார்கள்.

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் நலனுக்காக புதிய காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ஒவ்வொரு குடும்பத்தலைவரின் பெயரிலும் காப்பீட்டு பத்திரம் வழங்கப்படும். எதிர்பாராத வகையில் குடும்பத்தலைவரை இழக்கும் நிலை ஏற்படும்போது சம்பந்தப்பட்ட குடும்பத்தலைவரின் வாரிசாக பத்திரத்தில் பதிவு செய்யப்படும் வாரிசுதாரருக்கு ரூ.5 லட்சம் நிவாரண தொகை கிடைக்கும். இது வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் திட்டமாக உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று காலத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தற்போது தமிழக அரசு பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நடைமுறைப்படுத்தி உள்ளது. இந்த நேரத்தில் பொதுமக்கள் சுயக்கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். பொது இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் தொடங்கி உள்ளது. இந்த நேரத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டும். அரசு நிர்ணயித்து உள்ள காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களுக்கு அருகிலும், குடிசை பகுதிகள், எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகிலும் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் புகையில்லாத பட்டாசுகளை வெடிக்கவும், பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் தீபாவளியை கொண்டாட வேண்டிக்கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் சி.கதிரவன் பேசினார்.

மேலும் செய்திகள்