ஊரடங்கால் 8 மாதமாக நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் - பணிமனை முன் கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு
ஊரடங்கால் 8 மாதமாக நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க வலியுறுத்தி பணிமனை முன் கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி,
அழகப்பபுரம் அருகே நிலப்பாறை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு புகழ்பெற்ற புனித ஜார்ஜியார் திருத்தலம் மற்றும் புனித தாமஸ் குருசு மலையும் உள்ளது.
இதனால், இங்கு சுற்றுவட்டார மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளிமாநிலத்தை சேர்ந்த மக்களும் வந்து திருத்தலத்தில் நடைபெறும் திருப்பலி, ஆராதனையில் பங்கு பெறுவர். இங்கு வரும் மக்களுக்கு வசதியாக நாகர்கோவிலில் இருந்து கோட்டார், சுசீந்திரம், வழுக்கம்பாறை, மயிலாடி, அழகப்பபுரம், நிலப்பாறை, திருமூலநகர், அஞ்சுகிராமம், செட்டிகுளம், கூட்டப்புளி வழியாக நெல்லை மாவட்டம் புதுமனைக்கு ‘வி 3‘ என்ற அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது.
பஸ் போக்குவரத்து கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் முதல் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு கொரோனா ஊரடங்கில் தளர்வுகளை அரசு அறிவித்ததை தொடர்ந்து பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஆனால், நிலப்பாறை, திருமூலநகர் ஆகிய 2 கிராமங்களுக்கு மட்டும் பஸ் போக்குவரத்து விடப்படவில்லை.
பஸ் வசதி இல்லாததால் கடந்த 8 மாதங்களாக 2 கிராமத்தை சேர்ந்த மக்களும் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அழகப்பபுரத்துக்கு நடந்து வந்து, மாற்று பஸ் மூலம் நாகர்கோவில், கன்னியாகுமரி அல்லது அஞ்சுகிராமத்துக்கு செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து நிலப்பாறை, திருமூலநகர் புனித ஜார்ஜியார் திருத்தல பங்குதந்தை பீட்டர் பாஸ்டியன் தலைமையில் பங்கு மக்கள், பங்கு பேரவை நிர்வாகிகள், பங்கு மேய்ப்பு பணிக்குழு பேரவையினர், பங்கு இறைமக்கள், கலப்பை மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் ஜாண்கிறிஸ்டோபர், வக்கீல் பாலகிருஷ்ணன் மற்றும் பலர் நேற்று கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், அவர்கள் பணிமனையில் உள்ள கிளை மேலாளரை சந்தித்து நிலப்பாறை, திருமூலநகர் மக்கள் நலன் கருதி நாகர்கோவில்-புதுமனை வழித்தடத்தில் நிலப்பாறை வழியாக இயக்கப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்குமாறு வலியுறுத்தி மனு அளித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி உறுதியளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.