தீபாவளிக்காக கோவையில் இருந்து வெளியூர்களுக்கு 186 சிறப்பு பஸ்கள் - கொடிசியாவில் இன்று முதல் தற்காலிக பஸ் நிலையம்

தீபாவளி பண்டிகையையொட்டி கோவையில் இருந்து வெளியூர்களுக்கு 186 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கொடிசியாவில் இன்று (வியாழக்கிழமை) முதல் தற்காலிக பஸ் நிலையம் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-11-12 14:00 GMT
கோவை, 

தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவையில் வசிக்கும் வெளி மாவட்ட மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதற்காக கோவையில் இருந்து ஈரோடு, சேலம், திருப்பூர், தர்மபுரி, நாமக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை, ராமேசுவரம், திருச்செந்தூர், தூத்துக்குடி, நெல்லை, ராஜபாளையம், குமுளி, தேனி ஆகிய ஊர்களுக்கு தினமும் 186 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மேலும் தீபாவளியையொட்டி சிங்காநல்லூர் பஸ் நிலையம் மற்றும் கோவை மாநகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க கொடிசியா வளாகத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோவை கொடிசியா கண்காட்சி வளாகத்துக்கு எதிரே சேலம் மற்றும் அதை தாண்டி உள்ள ஊர்களுக்கும், திருச்சி மற்றும் அதை தாண்டி உள்ள ஊர்களுக்கு செல்பவர்களின் வசதிக்காகவும் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு பயணிகள் உட்காருவதற்கு தனி இடம், கழிவறை, குடிநீர், மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தற்காலிக பஸ் நிலையத்துக்கு வருவதற்காக நகரின் பல்வேறு இடங்களில் இருந்து இணைப்பு டவுன் பஸ்களும் இயக்கப்பட உள்ளன. இந்த தற்காலிக பஸ் நிலையம் இன்று (வியாழக்கிழமை) முதல் செயல்படும்.

திருப்பூர், ஈரோடு, சத்தி செல்லும் பஸ்கள் காந்திபுரம் பஸ் நிலையத்தில் இருந்தும், மதுரை, நெல்லை செல்லும் பஸ்கள் சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்தும், ஊட்டி, மேட்டுப்பாளையம் செல்லும் பஸ்கள் சாய்பாபா காலனி பஸ் நிலையத்தில் இருந்தும் வழக்கம் போல இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்