நிதி நிறுவனம் நடத்தி ரூ.5 கோடி மோசடி; உரிமையாளர் கைது மனைவியுடன் பேராசிரியர் தலைமறைவு

நிதி நிறுவனம் நடத்தி பலரிடம் ரூ.5 கோடி மோசடி செய்த வழக்கில் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய கல்லூரி பேராசிரியர் மனைவியுடன் தலைமறைவானார். இதுகுறித்து கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது.

Update: 2020-11-12 13:56 GMT
கோவை,

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (வயது 64). இவருடைய மகன் கிருஷ்ணராஜ் (40). இவரது மனைவி கல்யாணி (35). கிருஷ்ணராஜ் பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். தற்போது இவர் குடும்பத்துடன் கோவை காளப்பட்டி வீரியம்பாளையம் ரோடு பகுதியில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் இவர்கள் 3 பேரும் சேர்ந்து “நெக்ஸஸ் டிரேடர்ஸ்“ என்ற ஆன்லைன் நிதிநிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் கூடுதல் வட்டி தருவதாகவும், வட்டி தொகையை மீண்டும் சேர்த்து அதற்கும் கூடுதல் தொகை தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியதாக கூறப்படுகிறது. இதனை நம்பி பலரும் இவர்களது நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

இந்த நிலையில் முதலீட்டு தொகை மற்றும் வட்டி தொகையை திருப்பி தராமல் ஏமாற்றம் அடைந்த காங்கேயம் பாளையத்தை சேர்ந்த தாமோதரசாமி என்பவர், கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் தீவிர விசாரணை நடத்தி வந்தார்.

விசாரணையில், சண்முகம், கிருஷ்ணராஜ், கல்யாணி ஆகியோர் சேர்ந்து நிதி நிறுவனம் நடத்தி ரூ.5 கோடி மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து சண்முகத்தை போலீசார் கைது செய்தனர். இதனை அறிந்த கல்லூரி பேராசிரியர் கிருஷ்ணராஜ், அவரது மனைவி கல்யாணி தலைமறைவாகிவிட்டனர். அவர் களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கல்லூரி பேராசிரியர், அவருடைய மனைவி கல்யாணி பற்றி தெரிந்தவர்கள் மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் கொடுக்குமாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்